Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்-ஐ விட பெரியது கிராமோத்சவம் விளையாட்டு! - சேவாக், வெங்கடேஷ் பிரசாத் பெருமிதம்

Isha Gramotsavam

Prasanth Karthick

, திங்கள், 30 டிசம்பர் 2024 (08:35 IST)

ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-ஆவது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதி போட்டிகள் சத்குரு முன்னிலையில் நேற்று (29/12/2024) கோவையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பேசிய சத்குரு,”ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும்” எனக் கூறினார். மேலும் ஐபிஎல்-ஐ விட பெரியது கிராமோத்சவம் என வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சேவாக் பெருமிதத்துடன் கூறினர். 

 

 

கோவை ஆதியோகி முன் நடைபெற்ற இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர். 

 

இவ்விழாவில் சத்குரு அவர்கள் பேசுகையில் “ ஒரு காலத்தில் 100 சதவீத கல்வி பெற்றதாக இருந்த நாடு, விடுதலை பெறும் போது 93% கல்வியறிவு இல்லாத நாடாக மாறி இருந்தது. இது வெறும் 300 ஆண்டுகளில் நடைபெற்றது. 
 

ஆனால் கடந்த 75 வருடங்களில் நாம் மகத்தான பல விஷயங்களை செய்துள்ளோம். புத்திசாலித்தனம், உறுதி, திறமை போன்ற பல அம்சங்கள் நம் வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் நமக்காக செயல்பட வேண்டும் என்றால் நாம் புத்துணர்வாக, உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் புத்துணர்வாக இல்லை என்றால் எவ்வளவு பணம், சொத்து, திறமை இருந்தாலும் உங்களால் எதையும் உருவாக்க முடியாது. அந்த வகையில் கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கிராமோத்சவம் நடத்தப்படுகிறது. 

 

எளிமையாக துவங்கபட்ட இந்த கிராமோத்சவம் 5 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் பெரிய விழாவாக இன்று மாறி உள்ளது. ஆனால் இது போதாது.  ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும்”. எனக் கூறினார். 

 

முன்னதாக கிரிக்கெட் வீரர் சேவாக் பேசுகையில் “மனித நல்வாழ்விற்காக சத்குரு அவர்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு என் வணக்கங்கள். கிராமோத்சவம் திருவிழாவின் நோக்கம், தீவிரம் அனைத்தையும் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிராமங்களில் விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி மகத்தான விளையாட்டுத் திருவிழாவாக இது நடந்து இருக்கிறது. இதற்கு சத்குருவிற்கு என் நன்றிகள். நீங்கள் வாழ்வதற்காக எதை செய்தாலும், விளையாட்டிற்காக தினமும் 10 - 15 நிமிடங்கள் செலவிடுங்கள். 

 

விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியர், அது குழுவாக இணைந்து செயல்படுவதை, எதிர்த்து போராடுவதை, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவதை, தோல்வியிலிருந்து மீண்டு எழுவதை என வாழ்வின் பல அம்சங்களை நமக்கு கற்று தருகிறது.” என அவர் கூறினார். 

 

பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேசுகையில், “காஞ்சிபுரத்தில் இருந்து தினக்கூலிக்கு பிறந்த பெண்ணால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்க முடியும். பெண்கள் விளையாட்டில் சாதனை படைக்க சத்குரு அவர்கள் ஊன்றுகோலாக திகழ்கிறார். நான் ஏராளமான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறேன். அந்த நேரத்தில் எல்லாம் எனக்கெழுந்த மன அழுத்திலிருந்து மீண்டு வர சத்குரு அவர்களின் உத்வேக வார்த்தைகள் எனக்கு உதவியாக இருந்தது.” எனக் கூறினார். 

 

கிரிக்கெட் வேகபந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில் “ஐபிஎல் போட்டிகளை ஒருங்கிணைப்பது கூட எளிதானது ஆனால் இது போன்ற கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவது தான் கடினமானது. இதனை செய்யும் ஈஷாவிற்கும் சத்குருவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார். 

 

வாலிபால் இறுதி போட்டியில் கர்நாடக மாநிலம் பனகல் கிராமத்தை சேர்ந்த அலிப் ஸ்டார் அணி வென்று முதல் இடத்தை பிடித்தது.  இரண்டாம் இடத்தை உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கிராமத்தை சேர்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி பிடித்தது. அதே போல் பெண்களுக்கான த்ரோபால் இறுதி போட்டியில் கர்நாடக மாநிலம் மார்கோடு கிராமத்தை சேர்ந்த அணி வென்று முதல் இடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டில் இருந்து புள்ளாக்கவுண்டன் புதூர் கிராம அணி பிடித்தது 

 

அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாலிபால் போட்டிகளை பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் இடத்தை கோவை அணியும், இரண்டாம் இடத்தை கிருஷ்ணகிரி அணியும் வென்றன. 

 

16 ஆவது ஈஷா கிராமோத்சவ இறுதி போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணிகளுக்கு 5 லட்சமும், 2-ஆம் இடத்தை பிடித்த அணிகளுக்கு 3 லட்சமும், 3 மற்றும் 4 ஆம் இடத்தை பிடித்த அணிகளுக்கு தலா 1 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. முன்னதாக ஈஷாவுடன் இணைந்து யுவா கபடி லீக் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. 

 

அதே போல் ஈஷாவுடன் இணைந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய சூப்பர் ஓவர் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் 150 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சேவாக் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் சிலம்பம் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்டோர் வயது அடிப்படையில் 6 பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

 

இதனுடன் தென்னிந்திய மாநிலங்களின் பாரம்பரிய கலைகளை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் பறையாட்டம் மற்றும் தவில் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சிகளும், கர்நாடகா சார்பில் பிலி வேசா எனும் புலி நடனமும்,  தெலுங்கானா சார்பில் கோண்டு பழங்குடிகளின் குசாடி நடனமும், கேரளா சார்பில் செண்ட மேளம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பஞ்சரி மேளம், 1000 பேர் கலந்து கொண்ட வள்ளி கும்மி, 500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம், 1500 பேர் பங்கேற்ற கோலப் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றன.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்தில் அவுட்… தொடரும் கோலியின் பிடிவாதம்!