நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில், சிஎஸ்கே அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், வெற்றி பெற்ற ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. விராட் கோலி அபாரமாக விளையாடி 62 ரன்கள் அடித்தார் என்பதும், கடைசி நேரத்தில் ரொமாரியோ ஷெப்பர்டு 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி விளையாடிய நிலையில், இருபது ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான 17 வயது ஆயுஷ் மாத்ரா அபாரமாக விளையாடி 94 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 77 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் இரண்டு பந்துகளில் சிங்கிள் மட்டுமே கிடைத்தது. மூன்றாவது பந்தில் தோனி அவுட் ஆன நிலையில், நான்காவது பந்தில் நோபல் போடப்பட்டதால் அதில் 7 ரன்கள் கிடைத்தது.
இதனை அடுத்து மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலையில், அடுத்த 3 பந்துகளில் ஜடேஜா, ஷிவம் துபே ஆகிய இருவருமே மாறி மாறி சிங்கிள் எடுத்ததால், இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், ஆர்சிபி அணி 16 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் உள்ளது என்பதும், மும்பை, குஜராத், பஞ்சாப் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.