128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றது. அப்போது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் என 2 அணிகள் மட்டுமே மோதி, அதில் பிரிட்டன் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறாத நிலையில், தற்போது வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு ஜூலை 12 முதல் ஜூலை 29 வரை இந்தப் போட்டிகள் நடைபெறும் என்றும், இதற்காக நகரின் மையத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஒரு மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். மொத்தம் 90 விளையாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இணைந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.