இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்த நிலையில் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம் என்று முன்னாள் வீரர்கள் கருத்து கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து முன்னாள் இந்திய கேப்டன் கும்ப்ளே கூறியபோது, ஜடேஜா இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம், குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் இந்தியாவின் இலக்கை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக கொண்டு சென்றிருக்கலாம். குறிப்பாக, கிறிஸ் வோக்ஸ் மெதுவாகத்தான் பந்து வீசுவார். பஷீர் மற்றும் ஜோ ரூட் பந்துகளையும் ஜடேஜா இன்னும் கொஞ்சம் அடித்திருக்கலாம். பும்ரா மற்றும் சிராஜ் மறுமுனையில் இருந்தபோது சில ரன்களை அவர் எடுக்க மறுத்தார். அவர் இன்னும் கொஞ்சம் 'சான்ஸ்' எடுத்திருக்கலாம் என்று கூறினார்.
ஆனால், ஜடேஜாவின் அணுகுமுறையை கவாஸ்கர் ஆதரித்தார். "கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு ஒரு ஆல்-ரவுண்டர் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் ஜடேஜா செய்துள்ளார். முடிந்தவரை அவர் ஸ்ட்ரைக்கை தக்க வைத்திருந்தார். கையில் விக்கெட் இல்லாதபோது உயரமாக அடிக்கும் ஷாட்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது ஜடேஜாவின் ஆட்டத்தில் தெரிந்தது. ஜடேஜா உண்மையிலேயே ஆட்டத்தின் முடிவை நோக்கி மிகவும் எச்சரிக்கையாகத்தான் கொண்டு சென்றார்" என்று தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் ஜடேஜாவின் ஆட்டம் குறித்து கலவையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.