அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் என மூன்று முக்கிய துறைகளும் இந்த அனுமதிக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7 வரை பீகால் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அரசியல் பதட்டங்களால் பாகிஸ்தான் அணி நித தொடரில் பங்கேற்பது குறித்த சந்தேகம் நிலவி வந்தது. ஆனால், இப்போது அதிகாரிகள் தரப்பில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் இது குறித்துக் கூறுகையில், "பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் எந்த அணி இந்தியாவில் விளையாடுவதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இருதரப்புத் தொடர்கள் வேறு" என்று தெரிவித்துள்ளன. இதன் மூலம், சர்வதேசப் போட்டிகளுக்கும், இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி தொடர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஒப்புதல் காரணமாக ஆசிய கோப்பையின்போது இந்தியாவும் பாகிஸ்தானும் ஹாக்கி களத்தில் மோதுவது உறுதி. இது ஹாக்கி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.