மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளை வேண்டி விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாத கன்னியருக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
திருமாலை தனது கணவனாக மனதில் எண்ணிக்கொண்டு, அவரையே நினைத்து உருகியவர் ஆண்டாள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலில் குடிகொண்டிருக்கும் பெருமாளுக்காக தொடுத்த மலர் மாலைகளை எல்லாம், தானும் அணிந்து அழகு பார்த்து, சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறியவர் ஆண்டாள்.
உலகத்தை ஆளும் கண்ணனே தனக்கு கணவனாக வரவேண்டும் என்பதற்காக, ஆண்டாள் மேற்கொண்ட நோன்புதான் பாவை நோன்பு.
இந்த நோன்பை கடைபிடிப்பதற்காக அதிகாலையில் எழுந்து, தனது தோழியரையும் தன்னுடன் அழைத்துச் சென்று நீராடிவிட்டு வருவார். பின்பு தன்னை கோபிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், பெருமாள் அமர்ந்த கோவிலை கண்ணனின் வீடாகவும் எண்ணிக்கொண்டு தினமும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
திருமாலை தவிர, மற்ற மானிடரை கணவனாக ஏற்க மாட்டேன் என்று சபதம் மேற்கொண்ட ஆண்டாள், கிருஷ்ணன் அவதாரத்தின்போது கிருஷ்ணரை மணக்க கோபியர்கள் மேற்கொண்ட பாவை நோன்பை, மார்கழி மாதத்தில் ஆண்டாளும் மேற்கொண்டார்.