Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனி பெயர்ச்சி பலன்கள் 2026 - மிதுனம்

Advertiesment
mithunam
வினோதமான முயற்சிகளை மேற்கொள்ளப் போகும் மிதுன ராசி அன்பர்களே!
எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி:

கிரகநிலை:

இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார்.மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்:

இந்த பெயர்ச்சியினால் சற்று மந்தமான நிலை உண்டாகலாம். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பங்குச் சந்தை முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும்.

உடல்நலனைப் பொறுத்தவரை பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும்.

சிலர் புதிய இல்லங்களுக்கு மாறுவார்கள். உங்களுக்கு பேராற்றல் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சாமர்த்தியசாலி என்று பெயர் எடுப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். இதனால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.

உத்யோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களும் பலன் தரும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரையங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.

மிருகசீர்ஷம் - 3, 4:

இந்த பெயர்ச்சியில் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மன மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும்.

திருவாதிரை:

இந்த பெயர்ச்சியில் உங்கள் வாக்கு வன்மையால் நன்மை ஏற்படும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

புனர்பூசம் - 1, 2, 3:

இந்த பெயர்ச்சியில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
சிறப்பான கிழமைகள்: புதன், வியாழன்
அனுகூலமான திசைகள்: வடக்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம்: தினமும் காலையில் 2 துளசி தளம் சாப்பிடுங்கள். உடல் நலம் சீரடையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனி பெயர்ச்சி பலன்கள் 2026 - ரிஷபம்