Publish Date: Thu, 05 Mar 2026 (17:46 IST)
Updated Date: Thu, 05 Mar 2026 (17:49 IST)
சிந்தனைகளை சிதற விடாமல் கவனமுடன் இருக்க வேண்டிய ரிஷப ராசி அன்பர்களே!
எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி:
கிரகநிலை:
இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் ராசியையும் , எழாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலன்:
இந்த பெயர்ச்சியில் கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்ய வேண்டும். உங்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பயன்படுவதை விட மற்றவருக்கு பயன்படும். நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும்.
மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் அதை விடுவதே சிறந்தது. உடல் பொலிவடையும். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள். உங்களின் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்களுக்கு மனப்பக்குவத்தையும் தருவார். எனவே அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள்.
குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும்.
உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும்.
வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும்.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்ப வேண்டும். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும்.
மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.
கார்த்திகை - 2, 3, 4:
இந்த பெயர்ச்சியில் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள கூடிய மனநிலை உண்டாகும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.
ரோகினி:
இந்த பெயர்ச்சியில் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.
மிருகசீர்ஷம் - 1, 2:
இந்த பெயர்ச்சியில் குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.
சிறப்பு பரிகாரம்: பிரதோஷ வேளையில் அபிஷேகத்திற்கு அரிசி மாவை அபிஷேகத்திற்கு வழங்கி வர குழப்பங்கள் அகலும்.