பாலதேவராய சுவாமிகள் ஒருசமயம் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் பலன் இல்லாததால் அவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
 
									
										
								
																	
	ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால், அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு  தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர்  கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்..! 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது. சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும்  செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்...! அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு,  முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை  இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல்  போனது.
 
									
										
			        							
								
																	
	 
	கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம்  ஆனார்.