பிரமதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்ததினால் சிவனால்  தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.
 
									
										
								
																	
	காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் ஏவப்பட்ட “மாயை” என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். இதனைத் தொடந்து காசிபனும்  மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம்  கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இவர்களுள் சூரபதுமன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும், இந்திர ஞாலம்  எனும்  தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின்  பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.
 
									
										
										
								
																	
	சூரபதுமன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆண்டுவரும் காலத்தில் அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலைகளைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நான்கு புதல்வர்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் (3000) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
 
									
										
			        							
								
																	
	 
	சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சி செய்யலானான்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	அசுரர்களின் இக்கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டு சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகன் அவதரித்தார்.