Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீர் இந்தியாவின் மாநிலமா? தனி நாடா? – ஒரு வரலாற்று சுருக்கம்

காஷ்மீர் இந்தியாவின் மாநிலமா? தனி நாடா? – ஒரு வரலாற்று சுருக்கம்
, செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (14:15 IST)
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று வரைப்படத்தில் நாம் குறித்துக் கொண்டாலும் கூட காஷ்மீரிகளுக்கு காஷ்மீர் ஒரு தனி நாடாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. தற்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்திய அரசு முயற்சி செய்துவரும் வேளையில் காஷ்மீரின் வரலாற்றில் சில பக்கங்களை பார்ப்பது அது இந்தியாவின் மாநிலமா? அல்லது தனி நாடா? என்பதை நாம் தெரிந்து கொள்ள உதவும்.

பிரிட்டிஷார் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கும் முடிவுக்கு வந்தபோது பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டு, அதே சமயம் பிரிட்டிஷ் ஆதரவுடன் இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் மற்றும் குட்டி ராஜ்ஜியங்கள் மொத்தம் 565. இந்த 565 மாகாணங்களும் பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பகுதிகளுக்குள் சிறிய அளவிலேயே இருந்ததால் அவர்கள் அந்த நாடுகளோடு இணைவதை தவிர வேறு வழியிருக்கவில்லை.

ஆனால் காஷ்மீரின் கதை வேறு. அதிகமான இஸ்லாமிய மக்கள் வாழும் அந்த தேசத்தை பரம்பரையாக ஆண்டு வந்தவர்கள் இந்து ராஜாக்கள். அந்த வரிசையிலே 1925ல் காஷ்மீரின் ராஜாவாக முடிசூடியவர்தான் ஹரி சிங். இந்திய சுதந்திர போர் தீவிரமடைந்திருந்த அந்த காலத்தில் காஷ்மீர் தனிராஜ்ஜியமாக தனது வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் அளிக்கும்போது பாகிஸ்தானை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்பதில் ஜின்னா தீவிரமாக இருந்தார்.
webdunia

எனவே பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட சிறு ராஜ்ஜியங்கள் பாகிஸ்தான் அரசுடனும், இந்திய எல்லைக்குட்பட்ட சிறு ராஜ்ஜியங்கள் இந்திய அரசுடனும் இணைவதை தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனால் காஷ்மீர் இரு நாடுகளுக்கும் நடுவே இருந்ததால் அது யாருக்கு என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டது.

ஆனால் ஹரி சிங்கோ காஷ்மீர் யாருக்கும் கிடையாது அது தனிநாடு என்று சொல்லி வந்தார். அப்போது ஹரி சிங்குக்கு மக்கள் புரட்சி என்னும் பெயரில் ஒரு பிரச்சினை கிளம்பியது. ஹரி சிங்கின் ஒன்றுக்கும் உதவாத அரசை எதிர்த்து ஷேக் அப்துல்லா என்பவர் மக்கள் புரட்சியை தொடங்கினார். மக்களின் ஆதரவு ஷேக் அப்துல்லாவுக்கு அதிகம் இருந்தது. அதை தவிர நேருவின் நெருக்கிய நண்பர் ஷேக் அப்துல்லா. நேருவும் ஷேக் அப்துல்லா காஷ்மீரில் மக்களாட்சியை கொண்டு வந்தால் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து விடலாம் என கருதினார்.
webdunia

ஷேக் அப்துல்லாவின் புரட்சிகர நடவடிக்கைகளை வெறுத்த ஹரிசிங் அவரை கைது செய்து சிறையிலடைத்தார். ஷேக் அப்துல்லாவுக்காக பரிந்து பேச வந்த நேருவை உள்ளே விடாமல் காஷ்மீர் எல்லையிலேயே திருப்பி அனுப்பினார். மவுண்ட் பேட்டன் பேச முயற்சித்தார். காஷ்மீருக்குள் அனுமதிக்கப்பட்ட மவுண்ட் பேட்டன் ஹரி சிங்கை பார்த்து பேச அனுமதிக்கப்படவில்லை. கடைசியாக காந்தி பேசுவதற்காக சென்றார். காந்தியை மட்டும்தான் நேரில் பார்த்து பேசினார் ஹரிசிங். அதற்கு பிறகு ஷேக் அப்துல்லா விடுவிக்கப்பட்டார்.
webdunia

1947ல் இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. ஆனால் காஷ்மீர் இரண்டு நாடுகளுடனும் இணையாமல் தனி நாடாகவே இருந்து வந்தது. காஷ்மீரை எப்படியும் கைப்பற்றிவிட நினைத்து போர் தொடுத்தது பாகிஸ்தான். பாகிஸ்தான் அளவுக்கு காஷ்மீரிடம் ராணுவ பலம் கிடையாது.

1947 அக்டோபரில் நடைபெற்ற முதல் பாகிஸ்தான் – காஷ்மீர் போரில் காஷ்மீருக்கு இந்தியா துணை நின்றது. அதன் வெற்றிக்கு பிறகு காஷ்மீரின் பாதுகாப்பு கருதி இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஹரி சிங். அதற்கு பிறகு 1948ல் ஜம்மு காஷ்மீரின் பிரதமராக பதவியேற்றார் ஷேக் அப்துல்லா.
webdunia

அதிக இஸ்லாமியர்களை கொண்ட காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்திருப்பதில் ஷேக் அப்துல்லாவுக்குமே விருப்பமில்லை. மேலும் ஹரிசிங் காலத்தில் காஷ்மீருக்குள் புகுந்துவிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அடிக்கடி கலவரங்கள் ஏற்பட்டு கொண்டிருந்தன. இதனால் காஷ்மீருக்குள் நுழைவதற்கு சிறப்பு அனுமதி ஒன்றை ஏற்படுத்தினார் ஷேக் அப்துல்லா.

இதனை கடுமையாக எதிர்த்த பாரதீய ஜன் சங்கத்தை தோற்றுவித்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜி “காஷ்மீரும் இந்தியாதான் என்னும்போது காஷ்மீருக்குள் நுழைய அனுமதி எதற்கு” என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் அந்த சமயத்தில் ஷேக் அப்துல்லா காஷ்மீர் தேசியத்தை பலமாக ஆதரித்து வந்தார். பஞ்சாப்பிலிருந்து அனுமதியின்றி காஷ்மீருக்குள் நுழைய முயன்ற ப்ரசாத் முகர்ஜியை காஷ்மீர் ராணுவம் கைது செய்தது. ஏற்கனவே உடல்நலமின்றி இருந்த ப்ரசாத் முகர்ஜி சிறையிலேயே இறந்தார். இது இந்து மக்களை மேலும் கோபம் கொள்ள செய்தது. இதற்கிடையே ஏற்கனவே கருத்து ரீதியாக நேருவுக்கும், ஷேக் அப்துல்லாவுக்கும் சண்டை இருந்து வந்தது.

பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய நேரு அப்துல்லாவை சிறையிலடைத்தார். அவரது கட்சியிலிருந்து பிரிந்த மற்றொரு கட்சியின் தலைவர் பக்‌ஷி குலாம் முகமது தலைமையில் 1956ல் காஷ்மீருக்கான புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. காஷ்மீர் மக்கள் விரும்பும்வரை சிறப்பு அந்தஸ்தோடு இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்கும் என ஒப்பந்தமானது.

சட்டப்பிரிவு 370 என்னும் இப்பிரிவை அப்போது இயற்றியவர் கோபாலசுவாமி ஐயங்கார். அதில் அவர் இரண்டு முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.

ஒன்று: காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கும்வரை அதன் தன்னாட்சி உரிமைகள் இந்திய அரசால் மதிக்கப்படும்

இரண்டு: இந்தியாவுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பதை காஷ்மீர் மக்களே முடிவு செய்வார்கள்.

இந்த இரண்டு முக்கிய நிபந்தனைகளையும் தூற எறிந்துவிட்டுதான் சட்டப்பிரிவு 370ஐ நீக்க முயற்சித்து வருகின்றனர். சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான் என்றாலும் அதை நீக்குவதற்கும், இந்தியாவின் அரசியலமைப்போடு இணைந்த மாநிலமாக மாறுவதற்கும் காஷ்மீர் மக்கள் சம்மதிக்க வேண்டும். ப்ரெக்ஸிட் போல ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதை எதுவும் செய்யாமல் உடனடியாக சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவது காஷ்மீர் மக்களுக்கே ஒப்புக்கொள்ள கூடியதாக இருக்காது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் ..நியூசிலாந்தில் அதிரடி !