Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாசிமக விழா கொண்டாடப்படுவதற்கு காரணமாக கூறப்படுவது என்ன தெரியுமா....?

மாசிமக விழா கொண்டாடப்படுவதற்கு காரணமாக கூறப்படுவது என்ன தெரியுமா....?
, வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:28 IST)
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும்.


மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்.

பிற தலங்களில் செய்யும் பாவம் காசி தலத்தில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு. மாசி மகம், மகா மகம் என்றாலே நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். கும்பகோணம் இத்தகைய சிறப்பு பெற்றுள்ளதற்கு ஒரு புராண வரலாறும் கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட பிரம்மா, உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடுமே என அஞ்சி சிவபெருமானிடம் முறையிட்டார்.

பல புண்ணிய தலங்களிலிருந்து மண், அமுதம், அனைத்து ஜீவராசிகளின் ஜீவ வித்துக்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு கும்பத்தில் வைத்து, அதை மங்கலப் பொருட்களால் அலங்கரித்து, அதன் நான்கு புறங்களிலும் வேத ஆகமங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து மேருமலையில் வைத்துவிடும்படி, சிவபெருமான் பிரம்மனிடம் கூறினார். பிரம்மனும் அவ்வாறே செய்தார்.

பிரளயம் வந்தபோது அனைத்தும் வெள்ளத்தில் சிக்கி அழிந்தன. அமுதம் நிறைந்த குடத்தை வெள்ளம் உருட்டிச் சென்றது. அக்குடம் ஒரு இடத்தில் தடைப்பட்டு நின்றது. அந்த இடம்தான் கும்பகோணம்.

சிவபெருமான் வேடன் உருவங்கொண்டு, அக்கும்பத்தின்மீது அம்பெய்து அதை உடையச் செய்தார். குடம் உடைந்து அமுதம் வழிந்து எட்டுத் திசைகளிலும் பரவியது. குடத்தை அலங்கரித்திருந்த பொருட்கள் வெவ்வேறு இடங்களில் விழுந்து லிங்கங்களாகக் காட்சி அளித்தன. அதன் பிறகு பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் சம்மதிக்க, பிரம்மன் மனம் மகிழ்ந்து பூர்வ பட்சத்தில் வரும் அசுவதி நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து, பெருமானையும் தேவியையும் எட்டு நாட்கள் வேறுவேறு வாகனங்களில் எழுந்தருளச் செய்தார்.

ஒன்பதாவது நாள் மேரு மலையைப்போல் உயர்ந்த தேர் செய்து, அதில் பஞ்ச மூர்த்திகளை எழுந்தருளச் செய்தார். பத்தாவது நாளான மக நாளில் பஞ்சமூர்த்திகளை வீதி உலா வரச் செய்து, மகாமகத் தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் மாசிமக விழாவை ஆரம்பித்து வைத்தார். அந்த அடிப்படையில்தான் மாசிமக விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாசி மகம் நாளில் விரதம் மேற்கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்...!!