பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.
பௌர்ணமி அன்று விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்கின்றனர். மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் வழிபாடுமேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்யப்படுகிறது.
மாத பௌர்ணமி: ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் ஏதேனும் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. மாசி பௌர்ணமி: மாசி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக மகத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது. கும்பமேளா, மாசிமகம் போன்ற விழாக்கள் மாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்றன. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நற்கதி கிடைக்கும்.
பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும்போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும்.