சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை.
சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி
தமிழர்களின் ஆதி தெய்வமாக விளங்கிய வராஹி அம்மனை வழிபட்டால் வாழ்வில் வெற்றிகள் கிடைக்கும். இந்த ஆதி தெய்வம் ஞானத்தின் கருப் பொருளாகவும் விளங்குகிறது. ஸ்ரீசக்கரத்தில் நான்கு மூலைகளிலும் சேனாதிபதியாக நிற்கின்றாள் வாராஹி அன்னை.
அகத்திய மாமுனிவர் வராஹி அன்னையின் அருளை ஸ்ரீசக்கரத்தின் வாயிலாக தெரிவிக்கின்றார். ஆஷாட நவராத்திரியில் வராஹி தேவியை வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், நீதிமன்ற வழக்குகள், நிலத்தகராறு பிரச்சினைகள் சுமுகமாகும்.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வழக்கு, பூமி சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், குழந்தை வரம், கல்வியில் தேர்ச்சி, பில்லி, சூனியம், ஏவல், தோஷம் நீங்க நினைத்த காரியம் கைகூடி வெற்றி பெற மாதத்தில் வருகிற வளர்பிறை, தேய்பிறை, பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும்.