அமெரிக்க விசா முறையை ஐடி துறை கடுமையாக நிலைகுலையச் செய்துவிட்டது. இதனால் ஐடி துறைப் பணியாளர்கள் அவதிப்படுவதுடன் அமெரிக்க குடியேற்றத் துறையும் மிகச் சிரமப்பட நேர்கிறது. இதன் அரசியலைச் சற்று ஆராய்வோம்.
அமெரிக்காவுக்குப் பணிக்கு வருபவர்கள், எச்1பி (H1B), எல்1 (L1) போன்ற விசாவில் வருவார்கள். இவை, பணிபுரியக் கொடுக்கப்படும் அனுமதி விசாக்கள். எச்1பி விசா, 3 வருட காலத்துக்குக் கொடுக்கபடும். எச்1பி விசா வைத்திருப்பவருக்குத் திருமணம் ஆகியிருந்தால் அவரது வாழ்க்கைத் துணைக்கு எச்4 (h4 dependent visa) விசா கொடுக்கப்படும். எச்4 விசாவில் படிக்கலாம். ஆனால், வேலைக்குப் போக முடியாது.
எச்1பி விசா கொடுக்கப்படும் 3 வருட காலமும் இந்தியா செல்ல வேண்டுமெனில், முதல் தடவை இந்தியா போய், சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குச் சென்று, ஸ்டாம்பிங் பெற்று, அதன் பின்னரே அமெரிக்கா திரும்ப முடியும். அதன்பின் மறுபடி அந்த விசாவில் செல்ல, ஸ்டாம்பிங் அவசியம் இல்லை. ஏதாவது மரணம் போன்ற சம்பவங்களில் திடீர் என இந்தியா வந்து செல்லும் சூழல் உருவானால் ஸ்டாம்ப் செய்யப்படாத எச்1பியில் இருப்பது மிக ரிஸ்க் ஆனது. அது போக, எல்லா டாக்குமெண்டும் சரியாக இருந்தும் எச்1பி ஸ்டாம்பிங் மறுக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
அதில் ஒரு ஐடி நண்பர் குறிப்பிட்டது,... "கோடையில் இந்தியாவுக்குச் சென்றோம். எச்1பி ஸ்டாம்பிங் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இங்கே அதன்பின் நண்பர்களை வைத்து, அபார்ட்மெண்ட் காலி செய்து அவர்கள் காரை நிறுத்தும் கராஜில் பொருட்களை வைத்து, வேலை இழக்கும் சூழலில் மறுபடி அமெரிக்கத் தூதரகம் சென்று எச்1பி ஸ்டாம்பிங் பெற்று வந்தோம். 6 மாதம் படாத பாடு பட்டுவிட்டோம்"
அதனால் ரிஸ்க் எதற்கு என எச்1பி விசா கிடைத்தவுடன் பல இந்தியர்கள் கனடாவுக்குப் போய் ஸ்டாம்பிங் பெற்று வருவார்கள். குடும்பம் முழுக்க கனடா போய், தங்கி, விசா ஸ்டாம்பிங் பெற்று வர எத்தனை செலவாகும் என யோசிக்கவும். இத்தனை சிரமப்பட்டாலும் அது 3 வருடம் தான். மூன்று வருடம் கழித்து மறுபடி மூன்று வருட எச்1பி கிடைக்கும். மறுபடி கனடாவுக்குப் போய், ஸ்டாம்பிங் வைக்கவேண்டும். இந்த 6 வருட காலம் முடிந்ததும், அடுத்து ஒவ்வொரு வருட இடைவெளியில் எச்1பி புதுப்பிக்க வேண்டும். இது எச்1பி விசாவின் நரக வேதனை.
இரண்டாவது சிக்கல் என்னவெனில் இதில் குறிப்பிட்டுள்ள கம்பெனியைத் தவிர மற்ற கம்பெனியில் வேலை எதுவும் செய்ய முடியாது. அமெரிக்க குடிமக்களுக்குக் கிடைக்கும் பல சலுகைகள் இதில் கிடைக்காது. ஐடி மேனேஜர் ஒருவர் 10 வருடமா எச்1பியில் இருக்கிறார். அவரது மகளுக்குக் கல்லூரியில் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கட்டும் அதிக அளவு கட்டணத்தைக் கட்டச் சொல்லுவதாகச் சொல்லி வருந்தினார்.
எச்1 கதை இப்படி என்பதால் பலரும் பச்சை அட்டை எனும் கிரீன் கார்டு (Green card) வாங்க விரும்புவார்கள். ஆனால் அதில் திருப்பதி வரிசையைத் தோற்கடிக்கும் அளவு கியூ. இபி1 (EB1- Employment based visa 1), இபி2 (EB2) இபி3 (EB3) என மூன்று வகையில் பச்சை அட்டைகள் உள்ளன. அது போக, குடும்ப அடிப்படையில் பேமிலி விசா (Family based visa) வழங்கப்படும். அதாவது உங்கள் பெற்றோர், கணவர் / மனைவி, அண்ணன் / தங்கை இவர்கள் அமெரிக்கக் குடிமக்களாக இருந்தால் உங்களுக்கும் பச்சை அட்டை கிடைக்கும். ஆனால் இதில் 2001ஆம் ஆண்டு முதல் பச்சை அட்டைக்கு விண்ணப்பித்த பலரும் இன்னும் காத்திருக்கிறார்கள். கல்யாணம் செய்தால் ஓரிரு வருடத்தில் பச்சை அட்டை கிடைக்கும். பெற்றோர் / உடன்பிறந்தோர் வழியாக விண்ணப்பித்தால் வருடக் கணக்கில் காத்திருக்கும் நிலை!
இபி1 என்பது மிகத் திறமையான விஞ்ஞானிகள், மேதைகள், மேனேஜர்கள், முனைவர்கள் போன்றோருக்கு வழங்கப்படுவது. அதாவது நீங்கள் ஒரு நோபல் பரிசு வாங்கினால் அல்லது கம்பனியின் தலைமை நிர்வாகியாக இருந்தால் கிரீன்கார்டு ரெடி. அதனால் இதில் கூட்டம் குறைவு எனினும் இபி2, இபி3 எனும் இரு வகைகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சில ஆயிரம் விசாக்களே வழங்கப்படுவதால் சுமார் 10 ஆண்டுகளாக எச்1 விசாவில் காத்திருந்து வாழ்க்கையை வெறுத்தவர்கள் பலர்.
என்னுடன் பேசிய ஐடி நண்பர்கள் அனைவரும் மிக மெதுவாக நகரும் இபி3 வரிசையைச் சார்ந்தவர்கள். அவர்கள் விண்ணப்பித்த வருடம் 2008, 2009, 2007. இந்த மாதம் 2003ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1 வாரம் என்ற அளவில் தேதி நகரும். அந்த கணக்கின்படி இவர்களுக்குப் பச்சை அட்டை கிடைக்க 10 முதல் 15 வருடம் ஆகலாம். இப்ப 2014 ஆண்டு விண்ணப்பித்திருந்தால் உங்கள் பேரக் குழந்தை காலத்தில் பச்சை அட்டை கிடைக்கலாம் (!)
அதுபோக இந்திய ஐடி கம்பெனிகள் பலவும் உப்புமா கம்பெனிகள் என்பதால் வேண்டுமென்றே பச்சை அட்டை விண்ணப்பத்தைக் காலம் தாழ்த்திப் போடுவதும், இபி2இல் போக வேண்டியவனை இபி3க்குப் போடுவதும் (அப்பதான் நிறைய நாள் இதே கம்பெனியில் வேலை செய்வான் என்பதால்), மேனேஜருக்கு வேண்டியவன், சொந்தக்காரனை இபி3ல் இருந்து இபி2க்கு மாற்றுவதும் என ஏகப்பட்ட கோல்மால்கள் நடக்கின்றன.
ஆனால் ஊரில் என்னடாவென்றால் "ஐடி என்றால் ஏதோ அம்பானி, பிர்லா" ரேஞ்சுக்கு இழுத்து வைத்துத் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் இங்கே சக்கையாக அரசாலும் கம்பெனிகளாலும் அவதிப்படுகிறார்கள் என்பதுதான் நிஜம். ஓரளவு பெரிய கம்பெனி என்றால் கொஞ்சம் தப்பலாம். உப்புமா கம்பெனி, காண்ட்ராக்டர் மூலம் எல்லாம் வந்தால் ஏகப்பட்ட தில்லுமுல்லும், 15 வருடம் வேலை பார்த்து, சக்கையாக பிழிந்து எடுக்கப்பட்டு, எதுவுமின்றி கடைசியில் டிபோர்ட் (Deportation) ஆவதும் தாம் மிச்சம்.
அமெரிக்க ஐடி விசா இப்படி சிக்கலாகக் காரணம் என்னவெனில்:
அதிகரித்த ஐடி வேலை வாய்ப்புகள்: ஐடி இப்படி வளரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் ஏகப்பட்ட வேலைகள் உருவாகும் இத்துறையில் ஏராளமானோர் பணிக்குத் தேவைபடுகிறார்கள். அமெரிக்க காங்கிரஸ் அந்த அளவுக்கு விரைவாகச் செயல்பட்டு விசா எண்ணிக்கையை அதிகரிப்பது இல்லை. காரணம் இந்தியர்கள் உள்ளே வந்து, உள்நாட்டவர் வேலையைப் பறித்தால் என்ன செய்வது என்ற அச்சம்.
ஐடி கம்பனிகளின் சுயநலம்: ஐடி கம்பனிகள் எச்1பி விசா எண்ணிக்கையை உயர்த்தக் கோருகின்றனவே ஒழிய, பச்சை அட்டை எண்ணிக்கையை உயர்த்த அந்த அளவு முயற்சி எடுக்கவில்லை என்பதே உண்மை. இதனால் எச்1பியில் இருக்கும் தொழிலாளர் அதே கம்பெனியில் தொடர்ந்து வேலைக்கு இருக்க நேர்கிறது. அவர்களுக்குக் குறைந்த சம்பளம் கொடுக்க, கம்பெனிகளுக்கும் இது உதவுகிறது
இந்திய காண்டிராக்டர் சிலர், கம்பனிகள் சில செய்யும் மோசடிகள்: பொய்யாக சர்ட்டிபிகேட் காட்டி, அமெரிக்க விசா கொடுப்பதாகச் சொல்லிப் பணம் பெற்று ஆட்களை அமெரிக்கா கூட்டி வரும் பிராடு வேலையை இந்திய காண்டிராக்டர்கள் சிலர் செய்கிறார்கள். இது முழு மோசடி எனத் தெரிந்தும் பணம் கட்டி ஏமாறும் தொழிலாளரைக் கட்டாயம் நாம் குறைகூறியே ஆக வேண்டும்.
ஆக, இச்சிக்கல் தீர வழி என்னவெனில்:
டைவர்சிட்டி விசா எனும் பெயரில் வருடம் 81,000 அமெரிக்கப் பச்சை அட்டைகள் உலகெங்கும் வழங்கப்படுகின்றன. அவற்றை இபி2, இபி3க்கு மாற்றுவதன் மூலம் உடனடியாகப் பல்லாயிரம் தொழிலாளர் நலன் பெறுவார்கள். அதே சமயம் குடியேறிகள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்காது என்பதால் உள்நாட்டவர் வேலை இழக்க நேரும் அபாயமும் இல்லை.
எச்1பி, எல்1 விசாவில் நடக்கும் கோல்மால்களை அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிமை வேலைகளுடன் நிற்காமல், திறமைகளை வளர்த்து இபி1, இபி2 வகையில் வரத் தொழிலாளர் முயல வேண்டும்.
எச்1பி விசாவை 6 வருட காலத்துக்கு வழங்க வேன்டும். ஸ்டாம்பிங் விதியை ரத்து செய்ய வேண்டும்.
இவை இப்பிரச்சனை தீர, மிகவும் உதவியாக இருக்கும்.