Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"நான் ஏன் குண்டு வைத்தேன்?" - எழுதி மாட்டிக்கொண்ட ஒரு பேராசிரியர்

webdunia

செல்வன்

, செவ்வாய், 8 ஜூலை 2014 (17:56 IST)
தபால் குண்டு அனுப்பிய பேராசிரியர், "நான் ஏன் குண்டு வைத்தேன்" என்பதை ஒரு பிரகடனமாக எழுதிய போது கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கிறார்.

படத்தில் இருக்கும் டெட் காசைன்ஸ்கி (Ted Kaczynski) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்து, கலிபோர்னியா பெர்க்லி பல்கலையில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அதன்பின் தொழில்மயமாக்கலே மனிதனின் சிக்கல்களுக்கு எல்லாம் காரணம் என நினைத்து, தொழிற்சாலைகள் மேல் குண்டுவெடிப்பை நடத்தி வந்தார். தபாலில் குண்டுகளை அனுப்பியதால் அனுப்பியவர் யார் எனக் கண்டுபிடிக்க முடியாமல் யுனா பாமர் (una bomber) என்ற பெயரில் பத்திரிகைகளால் குறிப்பிடப்பட்டு வந்தார். 1978 முதல் 1995 வரை நாடு தழுவிய அளவில் நவீன தொழில்நுட்பத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்ட நபர்களுக்குத் தபால் குண்டுகளை அனுப்பி வந்தார். இதில் மூவர் இறந்தார்கள். 23 பேர் காயம் அடைந்தார்கள்.
 
இறுதியில் 1996இல் "நான் ஏன் குண்டு வைத்தேன்" என்பதை ஒரு பிரகடனமாக எழுதி, டைம்ஸுக்கு அனுப்பினார். அதை வெளியிட்டவுடன் அவரது எழுத்து நடையை வைத்து அவர் தான் குண்டுவைத்தவர் என்பதை அறிந்து அவரைக் கைது செய்தார்கள்.
 
அவரைக் கண்டுபிடிக்கக் காரணமாய் இருந்த அவரது பிரகடனம் இதோ. இந்தப் பிரகடனத்தில் அவர் இடதுசாரிகளின் போராட்ட முறையின் மேல் தனக்கு இருக்கும் கோபத்தை விளக்குகிறார். 
 
"இடதுசாரிகள் முன்பு சோஷலிஸ்டுகளாக இருந்தார்கள். இன்று அப்படி அழைக்க முடியாது. இடதுசாரிகள் இன்று, சோஷலிஸ்டுகள், கலெக்டிவிஸ்டுகள் (collectivists), "பொலிடிக்கலி கரெக்ட்" ஆசாமிகள், பெண்ணியவாதிகள், ஓரினச் சேர்க்கையாளர்களின் ஆதரவாளர்கள், மிருகவதை சங்கத்தினர் எனப் பிளவுபட்டுவிட்டார்கள், இவர்களுக்குள் பெரிதாக ஒற்றுமை இல்லை. ஒருவர் கோரிக்கையை இன்னொருவர் முழுதாக ஆதரிப்பதாகக் கூற முடியாது.
 
இடதுசாரிகளை மோடிவேட் செய்யும் இரு விஷயங்கள் "தாழ்வு மனபான்மை" மற்றும் "அதிகபடியான சோஷியலைசேஷன் (excessive socialization)"
 
தாழ்வு மனப்பான்மை என்பதில் குறைந்த தன்னம்பிக்கை, வலிமையற்றவராக உணர்தல், டிப்ரஷன், குற்ற உணர்வு, சுய வெறுப்பு ஆகியவை அடங்கும்
 
தன்னைப் பற்றி அல்லது தான் சார்ந்த குழுவைப் பற்றிச் சில கோட் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் கோபமடைபவர் தாழ்வு மனப்பான்மை உள்ளவர் என்பதை அறியலாம். இந்த வார்த்தைகளில் சில "ஓரியண்டல் (oriental), ஹேண்டிகேப்ட் (handicapped), சிக் (Chick)" போன்றவை. இவை முன்பு எந்தத் தவறான பொருளிலும் இல்லாமல் நார்மலாகத் தான் பயன்பட்டு வந்தன. ஆனால் இடதுசாரிகள் இவற்றை மோசமான பொருள் கொடுக்கும் வார்த்தைகள் எனப் பெரும் அளவில் பிரச்சாரம் செய்தார்கள். இன்று "வளர்ப்புப் பிராணி" எனும் வார்த்தை கூடத் தவறானதாகக் கருதப்பட்டு "அனிமல் கம்பானியன்" எனும் வார்த்தையைப் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது.
 
இடதுசாரிகள் தாம் ஆதரவளிக்கும் குழுக்கள் பின்வரும் வகையினதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். பலவீனமானவை (பெண்கள்), தோற்கடிக்கப்பட்டவர்கள் (பூர்வ குடிகள்), பொதுமக்களால் அசூயையுடன் பார்க்கப்படுபவை (ஓரினச் சேர்க்கையாளர்). இடதுசாரிகளே இக்குழுக்களை இன்ஃபிரியர் ஆகக் கருதுவதால் தான் அவற்றுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். (குறிப்பு: இதனால் பெண்கள் பலவீனமானவர்கள் அல்லது பழங்குடியினர் தோற்கடிக்கப்பட்டவர்கள் எனப் பொருள் இல்லை. இடதுசாரி மனப்பான்மை அப்படி கருதுகிறது)
 
பெண்ணியவாதிகள், ஆணுக்குப் பெண் சமம் என்பதை நிருபித்தே ஆக வேண்டும் என மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். காரணம் அவர்கள் ஆழ் மனத்தில் ஆணுக்குப் பெண் சமமாக இல்லாமல் இருக்கலாம் எனும் அச்சம் இருக்கிறது

வலுவான, வளமையான அனைத்தையும் (குழுக்கள், தேசங்கள் உட்பட) இடதுசாரிகள் வெறுக்கிறார்கள். இதனால் அமெரிக்கா, மேற்கத்திய நாகரிகம், வெள்ளை இன ஆண்கள் ஆகியோரை அவர்கள் வெறுக்கிறார்கள். ஆனால் வெளியே "அமெரிக்க ஆதிக்கத்தை, ஐரோப்பிய மேலாதிக்கத்தை, ஆணாதிக்கத்தை" எதிர்ப்பதாகக் கூறுவார்கள். அதே சமயம் இவர்கள் ஆதரிக்கும் சோஷலிச நாடுகளில், ஆதிவாசிகள் வசிக்கும் சமூகங்களில் இக்குறைகள் காணப்பட்டால், உதாரணமாக ஆதிவாசிக் குழு ஒன்று ஆணாதிக்கத்துடன் இருந்தால், அதை நியாயப்படுத்தும் அல்லது வேறு காரணம் கற்பிக்கும் முயற்சிகளில் இடதுசாரிகள் ஈடுபடுவார்கள். ஆக, வலுவான சமூகங்களை எதிர்க்கக் காரணம், அவற்றில் இருக்கும் பிழைகள் அல்ல. அவை வலுவாக இருப்பதே இடதுசாரிகள் அவர்களை எதிர்க்கக் காரணம்.
 
தன்னம்பிக்கை, சுயசார்பு, முயற்சி, ஆப்டிமிசம் முதலான வார்த்தைகள் இடதுசாரிகளின் அகராதியில் இல்லை. அவர்கள் தனிமனித முயற்சியின் எதிரிகள். கூட்டுறவின் நண்பர்கள். தன் பிரச்சினையைச் சமூகம் தீர்க்கும் என எதிர்பார்ப்பவர்கள். அதைத் தன்னால் தீர்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இழந்தவர்கள்.
 
அவர்களது போராட்ட முறை மறியல், வன்முறை, உரத்த குரலில் கோஷமிடுவது ஆகியவையாகவே இருக்கும். இதற்குக் காரணம் பிரச்சினையைத்  தீர்க்க வேண்டும் என்பது அல்ல. அதைப் பற்றி அவர்களுக்குத் துளியும் கவலை இல்லை. அவர்கள் நோக்கம் இப்படிப்பட்ட முறையில் போராட வேண்டும், அதுவே அவர்களுக்குப் பிடிக்கும் என்பதே. (உதாரணமாக, மிருகவதை சங்கம் பெடா துரித உணவகங்களில் மாமிசம் உண்ணச் செல்பவர்கள் மேல் போலி ரத்தம் வீசி எதிர்ப்புக் காட்டியது)
 
சமூகத்தில் எப்பிரச்சனைகளும் இல்லை எனில் இடதுசாரிகள் பிரச்சனைகளை உற்பத்தி செய்தே தீர்வார்கள். காரணம் பிரச்சனை இல்லை எனில் இடதுசாரி இயக்கமே இல்லை.
 
மேலே குறிப்பிட்டது அனைத்து இடதுசாரிகளுக்கும் பொருந்தாது. இது பொதுவான இடதுசாரி இயக்கக் கண்ணோட்டம் மட்டுமே.."
 
இவ்வாறு காத்திரமாக இடதுசாரி இயக்கம் மற்றும் அவர்கள் போராட்ட முறை மேல் தான் நம்பிக்கை இழந்ததைக் குறிப்பிட்டு அதனால் தான் குண்டுவைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக எழுதுகிறார் டெட் காசைன்ஸ்கி. அவர் எழுதியது சரி அல்லது தவறு என நாம் கூற முடியாது. அதைக் காலம் மட்டுமே தீர்மானிக்க முடியும். 
 
இப்படி தான் வெளியிட்ட பிரகடனத்தால் அடையாளம் காணப்பட்டு கொலராடோவின் உயர்பாதுகாப்புச் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக காலம் கழித்து வருகிறார் டெட் காசைன்ஸ்கி.

Share this Story:

Follow Webdunia tamil