முருகனைப் பற்றி நமக்கு கூறும் முதல் தமிழ் நூல் தொல்காப்பியம். கிமு 300 வாக்கில் தொல்காப்பியம் எழுதப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதற்கும் முந்தைய தமிழ் நூல்கள் இருந்து இருக்கலாம். ஆனால் அவை நம்மிடம் இல்லை. தொல்காப்பியம் முருகனைச் சேயோன் என அழைத்து, அவனைக் குறிஞ்சி நிலக் கடவுளாகச் சுட்டுகிறது.
தொல்காப்பியம் முருகன் எனும் கடவுளின் வரலாற்றைப் பற்றி அதிகம் உரைக்கவில்லை எனினும் முருகனைச் சேயோன் (சேய் = மகன்) என மட்டுமே அழைப்பதில் இருந்து அவன் மிக வலிமையான ஒரு தெய்வத்தின் மகனாகக் கருதப்பட்டு இருக்கவேண்டும் என்பது புலனாகிறது.
அந்தத் தெய்வம் யார் என்பதை உரைக்கும் முதல் நூல், வால்மீகி இராமாயணம். வால்மீகி இராமாயணத்தின் காலம், கிமு 500 முதல் கிபி 200 வரை எனக் கருதப்படுகிறது. மகாபாரதமும் கிமு 400 முதல் கிபி 200 வரை பல்வேறு காலக்கட்டங்களில் உருவான நூலாகக் கருதப்படுகிறது.
வால்மீகி இராமாயணத்தில் முருகனின் பிறப்பு விவரிக்கப்படுகிறது. சிவனும் உமையும் 100 வருடம் கூடிக் களித்தும் உமைக்குப் பிள்ளை பிறக்கவில்லை. சிவனின் விந்தை அதன்பின் அக்னிதேவன் தாங்கிச் சென்று, கங்கையிடம் சேர்ப்பிக்கிறான். கங்காதேவி அதைத் தாங்கி, முருகனை ஈனுகிறாள். சிவனின் விந்து உலகில் விழுந்த இடங்களில் காடுகள் சர வனம் எனும் காடுகள் உண்டாகின்றன. முருகனுக்கு அதன்பின் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டுகிறார்கள் என்கிறது வால்மீகி இராமாயணம்.
முருகனுக்குச் சேயோன் என்பதற்கு ஒப்பான குமரா (மகன்) எனும் பெயரையும் வால்மீகி இராமாயணத்தில் முதல் முதலாகக் காண்கிறோம். வால்மீகியே குமரனைக் கார்த்திகேயன், ஸ்கந்தன் எனவும் அழைக்கிறார். சரவணன் எனும் பெயரும் இங்கேயே பிறந்தது என யூகிக்கலாம்.
தொல்காப்பியத்தில் சேயோன் என அழைப்பதும், வால்மீகி இராமாயணத்தில் குமரா என அழைப்பதும் ஒத்துப் போவதால் இவ்விரண்டு நூல்களும் தொல்காப்பிய காலமான கிமு 300க்கு அருகே எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கலாம்.
(மயிலேறும் முருகன், கம்போடியா கிபி 7ஆம் நூற்றாண்டு)
கார்த்திகேயனின் வரலாற்றை நமக்கு விரிவாக எடுத்துக் கூறும் அடுத்த நூல், மகாபாரதம். கிருத்திகையில் ஆறு கார்த்திகைப் பெண்கள் அவனை வளர்த்த கதையும், அவன் தேவசேனாதிபதியாகி இந்திரன் மகள் தேவசேனாவை மணந்த கதையும் மகாபாரதத்தில் வருகின்றன. கீதையில் கண்ணன் "சேனாதிபதியரில் நான் ஸ்கந்தன்" எனக் கந்தனின் பெருமையை எடுத்துரைக்கிறான். மகாபாரதம் சற்றேறக் குறைய கிமு 400 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
ஸ்கந்தன் எனும் சமஸ்கிருதச் சொல்லுக்குச் சிந்தியவன் என பொருள். சிவனின் சிந்திய ஸ்கலிதத்தைக் கங்கை தாங்கியதால் அவனுக்கு ஸ்கந்தன் எனப் பெயர்.
முருகன் வேதங்களிலும் குறிப்பிடப்படும் கடவுள். ஸ்கந்தனுக்கான மந்திரங்களைச் சாம வேதம் உரைக்கிறது. சாம வேதத்தில் ஸ்கந்த- விசாகன் எனும் இரட்டைக் கடவுளருக்கான மந்திரங்கள் குறிப்பிடப்படுகின்றன.
முருகனின் வாகனமாக மயில் ஆனது, கிமு 4ஆம் நூற்றாண்டு வாக்கில் எனத் தெரிகிறது. கிமு 4ஆம் நூற்றாண்டு வாக்கில் சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் எழுதிய பாணினி, மவுரியர்கள் மயிலில் ஸ்கந்தனை ஏற்றிச் சென்று, பொன் சம்பாதித்ததாகக் கூறுகிறார். இதற்கு மயில் மேல் முருகனை அமரவைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று, நன்கொடை வசூலித்ததாகப் பொருள் கொள்ளலாம். இன்றும் இந்திய கோயில்களில் இம்மாதிரி ஊர்வலங்கள் செல்வதைக் காண்கிறோம்.
மயிலில் முருகன் ஏன் ஏறினான்? இதற்குக் கூறப்படும் ஒரு காரணம் என்னவெனில், மவுரியர் என்றாலே மயில் எனத் தான் பொருள். மவுரியர்களின் சின்னம், மயில். ஆக மவுரியர்கள் முருகனை மயில் மேல் ஏற்றியதில் வியப்பு இல்லை. மவுரியர்களுக்கு பின் வந்த குஷான மன்னர்கள், குப்தர்கள் காலத்திலும் முருக வழிபாடு, வட இந்தியாவில் பிரதானமாக இருந்தது.
கிபி 150ஆம் ஆண்டுவாக்கில் குஷான மன்னன் ஹுவிசகன் அச்சிட்ட தங்க நாணயத்தில் "ஸ்கந்த கொமானோ பிசாகோ" (விசாகோ) என ஸ்கந்தனும், வேலேந்திய விசாகனும் இரட்டைக் கடவுளராக நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. ஆக ஸ்கந்தனின் ஒரு வடிவமே விசாகன் அல்லது தனித் தெய்வமாக வழிபடப்பட்டு பின்னாளில் ஸ்கந்தனுடன் இணைந்த வடிவமாக விசாகனைக் கொள்ளலாம்.
வடக்கே குப்தர் காலத்தை முருக வழிபாட்டின் உச்சமாகக் கொள்ளலாம். குமார குப்தன், ஸ்கந்த குப்தன் என்ற குப்த சக்ரவர்த்திகள் நாட்டை ஆண்டார்கள். குப்தர் அரசவையில் இருந்த காளிதாசன், முருகனின் பிறப்பைக் குமார சம்பவம் எனும் நூலாக எழுதி, முருகனுக்கு அழியாப் புகழ் தேடிக் கொடுத்தான்.
தெற்கே கிமு 300 வாக்கில் சேயோன் என முருகன் அழைக்கப்பட்டதைக் கண்டோம். இந்திரன், வருணன், கொற்றவை, முருகன், திருமால் ஆகியோரைத் தமிழ் மண்ணின் தெய்வங்களாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. வடக்கை போலவே இங்கேயும் முருக வழிபாடு, முருகனின் வரலாற்றுக் கதைகள் கிமு 300 - 400 முதல் கிபி 400 வரை உருவானதை அறியலாம்.
முருகனின் பிறப்புக் கதை, இராமாயணத்தில் உள்ளது போலவே, கலித் தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.
திருமுருகாற்றுப்படையில் முருகன் மலைவாழ் மக்கள், குறவரின் தெய்வமாகக் கூறப்படுகிறான். முருகனை வணங்கி வேலாட்டம், வெறியாட்டம் முதலான ஆட்டங்களை மலைவாழ் மக்கள் நடத்தினார்கள். முருகன் பெண்கள் மேல் இறங்கும் தெய்வமாகவும் இருந்தான். இப்படி சாமி வந்த பெண்களை அமைதிப்படுத்த ஆற்றுனர்கள் எனும் ஷமான்கள் இருந்தார்கள். முருகனுக்குக் குருதி கலந்த அரிசிச் சோறு உணவாகப் படைக்கப்பட்டது என்கிறது திருமுருகாற்றுப்படை
முருகனை மேட்டுக்குடியினரும் வணங்கியதாகக் கூறுகிறது திருமுருகாற்றுப்படை. பிராமணர்கள் ஆறு அக்ஷர மந்திரம் ஓதி மலர்களைத் தூவி, முருகனை வணங்கினார்கள். செந்தூர் முருகனின் ஆலயத்தில் பாண்டிய மன்னர்கள் வந்து வழிபட்டார்கள்.
முருகன், தாரகாசுரனை அழிக்கப் பிறந்தவன். "அசுரர் குடி கெடுத்த ஐயா வருக" என்கிறது சஷ்டி கவசம். அவனது அவதார நோக்கம் அசுரரை அழித்து, தேவரைக் காத்தல். தேவரின் படை நடத்தும் தேவசேனாதிபதி அவன். தேவர்களின் சேனாதிபதி என்பதால் அவன் தேவசேனாதிபதி என அழைக்கப்பட்டானா அல்லது இந்திரனின் மகளான தேவசேனையின் பதி என்பதால் தேவசேனா பதி என அழைக்கப்பட்டானா என்பது சுவையான சொல் விளையாட்டு.
திருமுருகாற்றுப்படையில் முருகன் தேவசேனையை மணந்து, பின் தினைப்புனம் காத்த வள்ளியை மணந்ததும் குறிப்பிடப்படுகிறது. முதல் மனைவி தேவசேனையே என்பதாலும் வள்ளியை அவன் இரண்டாம் மனைவியாக மணந்தது, வள்ளியின் அந்தஸ்தைக் குறைப்பதாக ஆகுமா? திருமுருகாற்றுப்படை குறிப்பின்படி வள்ளியை அவன் மணந்தது தேவசேனைக்குத் தாங்க முடியாத அழுகையை வரவழைத்து அவள் கண்ணீரால் திருப்பரங்குன்ற மலை முழுவதும் நிரம்பியதாம்.
மற்றபடி இருதார மணம் புரிவோர், இரண்டாம் தாரத்தின் மேலேயே அதிக அன்புடன் இருப்பது இயல்பு. முதல் தாரத்தை விட இரண்டாம் தாரத்தைப் பிடித்ததனால் அல்லவா, அவர் இரண்டாம் தரம் மணம் புரிகிறார்? தசரதன் தன் கடைசி மனைவியான கைகேயியின் மேலே அன்புடன் இருந்தான். ஆக வள்ளியின் மேல் முருகனின் ஆசை எல்லை கடந்து இருந்ததையே நாம் அறிகிறோம்.
பின்னாளில் கார்த்திகேய வழிபாடு வடக்கே பொலிவிழந்தாலும் தமிழ்க் கடவுளாக முருகன் இன்னும் திராவிடர் மனதில் நிறைந்துள்ளான் என்பது மகிழ்ச்சியான விஷயமே.