அடுத்த ஜனாதிபதி கனவில் இருக்கும் ஹிலாரி கிளின்டன் (Hillary Rodham Clinton) தன் வாழ்க்கைச் சரிதத்தை நூலாக எழுதினார். அந்த நூலை விளம்பரம் செய்ய ஏபிசி தொலைக்காட்சிக்கு ஒரு நேர்காணலுக்கும் ஒத்துக்கொண்டார். அவரைப் பேட்டி கண்ட டயான் ஸ்வாயர் (Diane Sawyer) "பொருளாதார ஏற்றத் தாழ்வைப் பற்றி அடிக்கடி பேசும் நீங்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேச 2 லட்சம் டாலர் வாங்குவது எப்படி சரியாகும்?" என வினவினார்
"நான் பணக் கஷ்டத்தில் இருப்பதால் அப்படி வாங்குவது சரிதான்" எனச் சொல்லி அனைவரின் நகைப்புக்கும் ஆளாகியுள்ளார் ஹிலாரி. சுமார் 25 மில்லியன் டாலர் சொத்துகள், ஏராளமான மாளிகை மாதிரி வீடுகள் அவருக்கு இருந்தும், அவர் தான் பணக் கஷ்டத்தில் இருப்பதாகக் கூறியிருப்பது ஏழைகள் படும் உண்மையான பணக் கஷ்டம் என்றால் அவருக்கு என்னவென்று தெரியுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இதற்கிடையே நெவாடா பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ஹிலாரிக்குப் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்து, அதற்கு 2.5 லட்சம் டாலர் கட்டணம் அளிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து "இது மாதிரி செலவுகள் கல்லூரி கல்விக் கட்டணத்தை அதிகப்படுத்திவிடும். அரசியல்வாதிகளுக்கு எதற்கு இத்தனை பெரிய தொகை?" எனப் போராடி வருவதும் ஹிலாரிக்குச் சிக்கலை அகிகப்படுத்தி உள்ளது.
சென்ற வருடம் நடந்த மேயர் தேர்தலில் வெற்றி பெற்று நியூயார்க் நகர மேயர் ஆனவர் டிபெலாசியோ (Bill de Blasio). ஆட்சியை பிடித்ததும் அவர் செய்த முதல் வேலை நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் இருக்கும் குதிரை வண்டிகளைத் தடை செய்தது. "மனிதனின் இன்பத்துக்காக குதிரைகளை வண்டியில் கட்டி இழுப்பது கொடுமை" என அதற்குக் காரணம் சொன்னார். குதிரைகளை நம்பிப் பிழைக்கும் குதிரைவண்டிக்காரர்கள் முதல், சென்ட்ரல் பார்க்கில் கடை வைத்திருக்கும் சிறு வணிகர்கள் தொடங்கி, பிரெஞ்சு முன்னாள் அதிபர் நிக்கொலஸ் சர்கோசி வரை இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அதனால் டிபெலாசியோ திட்டத்தில் இருந்து பின்வாங்க முயல, அவரது தேர்தலுக்கு உதவிய மிருக வதை சங்கத்தினர் அவரை நெருக்கவும் இப்போது இதுக்குப் பதில் பெர்ரெட் எனும் மிருகங்களை வளர்ப்புப் பிராணியாக வளர்ப்பதைத் தடுக்கும் சட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார் டிபெலாசியோ. அதுவும், இதுவும் ஒன்றா என யோசித்து மிருக வதை தடை சங்கத்தினர் குழம்பிப் போயுள்ளனர். அதே சமயம் பெர்ரெட்டுகள் குழந்தைகளைக் கடித்துவிடும், அவை வளர்ப்புப் பிராணியாக வளர்க்க ஏற்றவை அல்ல எனவும் எதிர்ப்புக் குரல் எழுந்து வருகிறது.
கலிபோர்னியாவின் அடுத்த கவர்னரைத் தேர்ந்தெடுக்கும் ரிபப்ளிக்கன் கட்சி பிரைமரி தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதில் போட்டியிடும் நீல் கஷ்காரி (Neel Tushar Kashkari) என்பவர், இந்தியாவைப் பூர்விகமாக கொண்டவர். இந்து. ஆனால் இவர் முஸ்லிம் என நினைத்து இவருக்கு எதிராகப் போட்டியிடும் டிம் டோனலி (Tim Donnelly) என்பவர் "நீல் கஷ்காரி ஆட்சிக்கு வந்தால் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்" எனச் சொல்லி அனைவரின் நகைப்புக்கும் ஆளாகியுள்ளார்.
பல அமெரிக்கர்களுக்கு சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசமே தெரியாது. நம்மால் கொரியா, சீனர், தாய்லாந்து மக்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் எல்லாரையும் "சீனாக்காரன்" என அடைமொழி கொடுப்பது போல் தான் அங்கும். சென்ற வருடம் விஸ்கான்ஸின் மாநிலத்தில் மசூதி என நினைத்து குருத்துவாராவில் புகுந்து ஏழு சீக்கியர்களைச் சுட்டுக் கொன்றான் வெள்ளை இனத் தீவிரவாதி ஒருவன். இந்த ஜியாக்ரபி பிரச்சனை கலிபோர்னியா மாநில கவர்னர் தேர்தலில் போட்டியிடுபவருக்கும் இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.