Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்டார்டிகாவில் புதிய உயிர்கள் கண்டுபிடிப்பு: ஏலியன்களை நெருங்கிவிட்டோமா?

அண்டார்டிகாவில் புதிய உயிர்கள் கண்டுபிடிப்பு: ஏலியன்களை நெருங்கிவிட்டோமா?
webdunia

செல்வன்

, வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (15:23 IST)
பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ஒரு ஏரியில் நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு வெளி கிரகங்களில் ஏலியன் உயிர் உள்ளதா என்பதை ஆராயும் ஆஸ்ட்ரோபயாலஜி (Astrobiology) துறைக்கு மிகப் பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. அண்டார்டிகாவில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கும் ஏலியன் உயிர்களுக்கும் என்ன தொடர்பு? இதை அறிய அந்த வில்லன்ஸ் ஏரியை (Lake Whillans) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
 
அண்டார்டிகா கண்டம் முழுக்கப் பனியால் மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட பனிக்கு அரை மைல் கீழே ஏரிகள் உள்ளன. இவற்றில் சில, பல மில்லியன் ஆண்டுகளாகப் பனியால் மூடப்பட்டவை. சூரிய வெளிச்சம் உள்ளே புகும் வாய்ப்பே கிடையாது. சூரிய வெளிச்சம் உள்ளே புகாததால் பாசி, செடி, கொடி, தாவரம் முதலிய எந்த உயிரினங்களும் அந்த ஏரிகளில் வாழும் வாய்ப்பு இல்லை எனக் கருதப்பட்டது.
 
பெரிய உயிர்கள் இல்லையெனினும் ஏரியில் ஒரு செல் நுண்ணுயிரிகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினார்கள். வில்லன்ஸ் ஏரியில் நுண்ணுயிரிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டாலும் அவை எதை உணவாக உட்கொள்ள முடியும் என்பதில் சர்ச்சை இருந்து வந்தது. அதனால் அண்டார்டிகாவில் உள்ள வில்லன்ஸ் ஏரியில் ஆய்வு செய்ய முடிவு செய்தார்கள். ஆனால் அந்த ஏரியைத் துளைத்து ஆய்வு செய்கையில் துளையிடும் உபகரணங்களில் உள்ள நுண்ணுயிரிகள் ஏரியில் புகுந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் உயர்வெப்ப நீரை குழாய் மூலம் பாய்ச்சி ஏரி மேல் உள்ள பனியில் துளையிடும் முயற்சியை மேற்கொண்டார்கள். வெப்பநீரில் நுண்ணுயிரிகள் தங்காது என்பதால் வெளியே உள்ள நுண்ணுயிரிகள் ஏரியில் நுழையும் வாய்ப்பு இல்லை.

webdunia
(வில்லன்ஸ் ஏரி)
 
இப்படி கஷ்டப்பட்டு ஓட்டை போட்டு, சுமார் 120 லிட்டர் ஏரி நீரை வெளியே எடுத்தார்கள். இந்த நீர், பல மில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் மேற்பரப்பையே பார்த்திராத நீர். அதை ஆய்வு செய்ததில் 4000 வகை நுண்ணுயிரிகள் ஏரி நீரில் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நுண்ணுயிரிகள் அனைத்தும் கீமோஆட்டோட்ராப் (chemoautotrophs) எனும் வகை நுண்ணுயிரிகள். இவை தம் உணவைச் சூரிய வெளிச்சம் மூலம் அன்றி, ஏரியில் படிந்துள்ள மினரல்கள், கெமிக்கல்கள் மூலம் அடையக் கூடியவை.
 
"நுண்ணுயிரிகள் பாறையை உண்டு உயிர்வாழ முடியுமா?" எனும் சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு இருந்ததாகவும், பாறையில் உள்ள மினரல்களை உணவாக உட்கொண்டு நுண்ணுயிரிகள் உயிர்வாழ முடியும் என இக்கண்டுபிடிப்பு நிரூபித்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
வியாழன் கிரகத்தின் துணை நிலவான யுரோபாவில் (Europa), மிகப் பெரும் சமுத்திரம் ஒன்று இப்போதும் திரவ வடிவில் காணப்படுகிறது. ஆனால் வில்லன்ஸ் ஏரியைப் போல, அந்தச் சமுத்திரமும் மிகப் பெரும் பனிப் பாளத்தால் மூடப்பட்டுள்ளது. வில்லன்ஸ் ஏரியைப் போல, யுரோபா சமுத்திரத்தின் உள்ளும் சூரிய வெளிச்சம் படுவதில்லை. ஆக வில்லன்ஸ் ஏரி நீரில் நுண்ணுயிரிகள் உருவாகி, பிழைத்திருக்க முடியுமெனில் யுரோபா சமுத்திரத்தின் உள்ளும் நுண்ணுயிரிகள் இருக்கும் வாய்ப்பு உண்டு அல்லவா?
 
ஆக, இந்தக் கண்டுபிடிப்பு, போலார் சயன்ஸ் (Polar science) விஞ்ஞானிகளை விட, ஆஸ்ட்ரோபயாலஜி துறை விஞ்ஞானிகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இதுவே யுரோபாவின் நுண்ணுயிரிகளை ஆராய, நாசாவுக்கும் தூண்டுதலாக அமையலாம் என அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil