அமெரிக்காவின் மிசவுரி மாநிலம், ஃபெர்குசன் (Ferguson) நகரில் மைக்கேல் பிரவுன் (Michael Brown) எனும் 18 வயது கருப்பின இளைஞர், சாலையில் நடந்து செல்கையில், டேரன் வில்சன் (Darren Wilson) எனும் வெள்ளை இன போலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆயுதம் ஏந்தாத இளைஞரைப் போலிஸ் எப்படி சுட்டுக் கொல்லலாம் என ஃபெர்குசன் நகரக் கறுப்பின மக்கள், போராட்டத்தில் குதித்தார்கள். தொடக்கத்தில் வந்த செய்திகள் மைக்கேல் பிரவுன் சாலையின் நடுவே நடந்து சென்றபோது அதிகாரி வில்சன் அவரை நடைபாதையில் செல்லப் பணித்ததாகவும், அதற்கு உடன்பட மறுத்த பிரவுனை அதிகாரி கைது செய்ய முயன்றபோது பிரவுன் வில்சனைத் தாக்கித் தப்ப முயன்றதாகவும், அதன்பின் வில்சன் துப்பாக்கியால் ஆறு முறை பிரவுனைச் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்தன.
(அதிகாரி வில்சன், முகநூல் பக்கப் புகைப்படம்)
மேலும் கொல்லபட்ட சமயம், பிரவுன் சரணடையும் நோக்கில் கைகளை உயர்த்தியதாகவும், அந்த நிலையிலும் வில்சன் விடாது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்ததாகவும் செய்திகள் வந்தன. உடனே கருப்பினத் தலைவர்களான ஜெஸ்ஸி ஜாக்சனும் (Jesse Jackson), அல் ஷார்ப்டனும் (Al Sharpton) ஃபெர்குசன் நகரம் விரைந்து சென்று போராட்டத்தைத் தொடங்கினர்.
அமைதியாகத் தொடங்கிய போராட்டம் வன்முறை, கல்வீச்சு எனச் சென்றதால் போலிசார் தடியடி, கைது நடவடிக்கைகளில் இறங்கினார்கள். அதன்பின் ஊடகங்களின் கவனம் அங்கே திரும்பியது. போலிஸார் அதிகப்படியான பலப்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாற்றிய மிசவுரி கவர்னர், ஃபெர்குசன் போலிஸைக் கலவரத்தை அடக்க வேண்டாம் எனவும், நெடுஞ்சாலைத் துறை போலிஸை அனுப்பிக் கலவரத்தைச் சமாளிக்க இருப்பதாகவும் கூறினார்.
அதனால் ஃபெர்குசன் போலிசார் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் விலகி நின்றனர். அதன்பின் நகரெங்கும் கடைகள் உடைக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டன. கடைகளைக் காக்க போலிஸ் முன்வராததால் கடைக்காரர்கள் துப்பாக்கியுடன் கடைமுன் காவலுக்கு நின்றார்கள்.
இந்தச் சூழலில் மிசவுரி போலிஸ் வெளியிட்ட வீடியோ ஒன்றில், சுட்டுக் கொல்லப்பட்ட பிரவுன், கடை ஒன்றில் புகுந்து உரிமையாளரைத் தாக்கிவிட்டு, $50 மதிப்புள்ள சிகரெட்டுகளைக் கொள்ளையடித்ததாகக் காட்டியது. மைக்கேல் பிரவுனைக் கொன்றது மட்டுமின்றி, அவரது நன்னடத்தையையும் போலிஸ் கொல்வதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாற்றினார்கள். ஆனால் அதன்பின் மெதுவாகப் பல விஷயங்கள் வெளியே வந்தன.
(கடைக்காரரைத் தாக்கும் பிரவுன்)
அதிகாரி டேரன் வில்சன் அளித்த வாக்குமூலத்தில் கடை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், தனக்கு போலிஸ் ரேடியோ மூலம் தெரிய வந்ததாகவும், மைக்கேல் பிரவுன் அந்தச் சூழலில் சிகரெட்டுடன் சாலையில் நடந்து சென்றதாகவும், அவரை நிற்கச் சொன்னபோது அவர் தன்னைத் தாக்கி, துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகவும் கூறினார். அதன்பின் பிரவுன் ஓடித் தப்ப முயன்றதாகவும், அவரை நிற்கச் சொன்னபோது நிற்காமல் திரும்பித் தன்னை நோக்கி ஆவேசமாக ஓடி வந்ததாகவும் அதைத் தடுக்க கை, காலில் சுட்டும் நில்லாமல் பிரவுன் ஓடி வந்ததால், இறுதியாக தலையில் சுடும் நிலை உருவானதாகவும் கூறினார்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் பிரவுனின் முன்பக்கமே குண்டுகள் பாய்ந்திருப்பதும், பிரவுன் இறக்குமுன் கஞ்சா பிடித்திருப்பதும் தெரிய வந்தது. மேலும் 12 பேர் அதிகாரி வில்சன் சொன்னதை உறுதிப்படுத்தி, சாட்சியம் அளித்துள்ளார்கள்.
இந்தச் சூழலில் மிசவுரியில் வன்முறை குறைந்துவிட்டது. வில்சன் கைது செய்யப்பட வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், போஸ்ட் மார்ட்டம் அறிக்கையும் புதிய சாட்சியங்களும் வில்சனின் தரப்புக்கு வலுச் சேர்க்கும் நிலை உருவாகி உள்ளது. அரசு பிராசிக்யூட்டர் என்ன நிலை எடுப்பார் என்பதைப் பொறுத்தே வில்சனின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும்.