Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும்

Advertiesment
மதச் சுதந்திரம்
webdunia

செல்வன்

, வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (12:46 IST)
அரசின் சட்டங்கள், சமூக நடைமுறைகள் மக்களின் மத நம்பிக்கைகளில் குறுக்கிடுகையில் என்ன செய்வது என்பது சரித்திர காலம் தொட்டு நிலவும் பிரச்சனை. நீரோ மன்னர் ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியில் ஒரு புதிய கல்ட் (cult) [அந்நாட்களில் கிறிஸ்துவம் கல்ட்டே] தோன்றியது. அவர்கள் பெயர் கிறிஸ்துவர்கள். அந்நாள் வரை மன்னனை மக்கள் வணங்குவது ரோமாபுரி மரபு மட்டுமல்ல, சட்டமும் கூட. ஆனால் இப்புதிய கல்ட்டின் உறுப்பினர்கள், மன்னரை வணங்க மறுத்தார்கள். அதனால் அது தேச துரோகமாக கருதப்பட்டு கொலேசியத்தில் நடைபெற்ற போட்டிகளில் கும்பல், கும்பலாகக் கிறிஸ்துவர்கள் பிடித்து வரப்பட்டு, சிங்கங்களுக்கு இரையாகப் போடப்பட்டார்கள். தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்கள். நாளடைவில் இவர்கள் எண்ணிக்கை பெருகவும் இவர்களை என்ன செய்வது என ரோமாபுரி அரசுக்குத் தெரியவில்லை. கடைசியில் அந்தச் சட்டத்தில் இருந்து அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
 
அதற்கு முன்னரே இந்தியாவில் இப்பிரச்சனை எழுந்திருந்தது. அசோகர் பண்டைய இந்தியாவின் முதல் பேரரசை எழுப்பினார். மவுரிய மன்னர்களில் சிலர் சமணர், சிலர் பவுத்தர், சிலர் ஆஜிவகர். குடிகளில் பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் தொல்மரபைப் பின்பற்றும் பழங்குடியினர், கிரேக்கர் என ஒரு கலவையான அரசை ஸ்தாபித்த அசோகர், தான் செதுக்கிய மூன்றாவது கல்தூணில் "பிராமணர்கள் மற்றும் சமணர்கள் விஷயத்தில் அரசின் சட்டங்களில் தளர்ச்சி காட்டப்பட வேண்டும்" என்பதைச் சட்டமாகச் செதுக்கி வைத்தார். அரச மதம் பவுத்தமாக இருக்கையில் இப்படி பிராமணர்கள், மற்றும் ஜைனர்கள் விஷயத்தில் அரசின் சட்டங்கள் தளர்த்தப்பட்டு, முழு உலகிற்கும் மற்றவரது மத நம்பிக்கையை எப்படி மதிப்பது என்பதற்கு அசோகர் சான்றாக விளங்கினார்.
 
இடைக் காலத்தில் ஐரோப்பாவில் அரசின் சட்டங்கள் மக்களின் மத உரிமையை மீறியதால் கூட்டம் கூட்டமாக மக்கள், அமெரிக்காவில் குடி புகுந்தனர். அதனால் அமெரிக்காவில் அரசின் சட்டங்கள் மத உரிமையில் குறுக்கிடுகையில் மத உரிமைக்கே முன்னுரிமை என்றும் அப்படி அந்த மத உரிமையை முடிந்தவரை காப்பாற்றவே சட்டங்களில் விதிவிலக்குகள் இருக்க வேண்டும் என்றும் வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் மட்டுமே மத உரிமைகளைச் சட்டங்கள் மீறலாம் என்றும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு 1963இலும், அமெரிக்க காங்கிரஸ் 1993இலும் தீர்ப்பளித்தன.
 
இதன்படி மதக் குழுக்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்குகள்:
 
1930களில் அமெரிக்காவெங்கும் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது, கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு ஒயின் உற்பத்தி செய்யவும், சர்ச்சுகளில் ஒயினைப் பரிமாறவும் உரிமை வழங்கப்பட்டது.
 
அமெரிக்க பள்ளிகளில் சேர, தடுப்பூசி போடுதல் கட்டாயம். ஆனால் ஜெகோவாஸ் விட்னஸ் உள்ளிட்ட மதக் குழுக்கள், ரத்தத்தை எடுப்பதை மத நம்பிக்கைக்கு எதிரானதாகக் கருதியதால், தடுப்பூசி போடுவதில் இருந்து விதிவிலக்கு பெற அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பள்ளியில் சேர விரும்பும் எக்குழந்தையின் பெற்றோரும் "தடுப்பூசி போடுவது எம் மத நம்பிக்கைக்கு எதிரானது" எனக் கூறினால் அக்குழந்தைகள் தடுப்பூசி போடாமல் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
 
webdunia
இந்தியாவில் சீக்கியர்கள் கிர்பான் எனும் அலங்கரிக்கப்பட்ட குத்து வாளை எப்போதும் சுமந்திருப்பது மதக் கடமையாக்கப்பட்டு உள்ளது. கிர்பான் கத்தியைப் பாராளுமன்றம், விமானங்கள் என எங்கும் தடையின்றி எடுத்துச் செல்ல, கிட்டத்தட்ட பல உலக நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன. இந்தியாவில் பாராளுமன்றம் முதல் விமானம் வரை எங்கும் கிர்பான் கத்தியைக் கொண்டு செல்லலாம். அமெரிக்க, கனடிய பள்ளிகளில் சீக்கிய மாணவர்கள் கிர்பான் கத்தியைப் பள்ளிக்குக் கொண்டு சென்றது பிரச்சனை ஆனதால், வழக்கு தொடரபட்டு கிர்பானுக்கு தடை விதிப்பது அமெரிக்க, கனடிய அரசியல் சட்டங்களுக்கு முரணானது எனத் தீர்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. அதனால் சவர பிளேடைக் கூட கொண்டுசெல்லத் தடை இருக்கும் பள்ளிகளில், கிர்பான் கத்தியை கொண்டு செல்ல எத்தடையும் இல்லை.
 
இந்திய சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தில் வந்தே மாதரம் பாடல் தான் தேசிய கீதம் போல் காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்கள் எங்கும் பாடப்பட்டது. அல்லாவைத் தவிர யாரையும் வணங்க மாட்டோம் என உறுதி பூண்ட முஸ்லிம்கள், "தாயை வணங்குவோம்" எனப் பொருள்படும் வந்தே மாதரம் பாடலைப் பாட மறுத்ததால் சர்ச்சைகள் எழுந்து, அதன்பின் ஜனகண மன தேசியகீதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் ஒருமுறை வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டபோது, அதை எதிர்த்து முஸ்லிம் எம்பிக்கள் சிலர் வெளிநடப்பு செய்தார்கள்.
 
தமிழ்நாட்டில் ஊராட்சித் தேர்தல்கள் நடந்து மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் மேயர்களை எப்படி விளிப்பது எனும் விவாதம் எழுந்து இங்கிலாந்து முறைப்படி "வர்ஷிப் ஃபுல் மேயர்" என்பதைத் தமிழாக்கி "வணக்கத்துக்குரிய மேயர்" என அழைப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதற்கு முஸ்லிம் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து, வணக்கத்துக்குரிய எனும் அடைமொழியை மேயருக்குப் பயன்படுத்த முடியாது எனக் கூறின.
 
அமெரிக்கப் பள்ளிகள் அனைத்திலும் கடவுள் வாழ்த்து, தடை செய்யப்பட்ட விஷயம். தேசிய கீதம் பாடப்படுகையில் எழுந்து நிற்கும் அவசியம் இல்லை. அவை மரபு கருதி அனைவரும் நின்றாலும் சிலர் கொள்கை காரணமாக எழுந்து நிற்க மறுப்பதுண்டு. அது அங்கே பேச்சு சுதந்திரமாக தான் கருதப்படுகிறது. அமெரிக்கக் கொடியை எரிக்க, அமெரிக்காவில் எத்தடையும் இல்லை.
 
ஆக, ஜனநாயக நாடுகளில் அரசின் சட்டங்களில் இருந்தும், நடைமுறைகளில் இருந்தும் மதரீதியான விதிவிலக்கு மக்களுக்கு அளிக்கப்பட்டே வந்துள்ளது. அப்பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்.
 

Share this Story:

Follow Webdunia tamil