Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மங்கள்யான்: நாசாவை விஞ்சிய இஸ்ரோ

Advertiesment
மங்கள்யான்: நாசாவை விஞ்சிய இஸ்ரோ
webdunia

செல்வன்

, திங்கள், 29 செப்டம்பர் 2014 (15:43 IST)
செவ்வாய்க்கு இதுவரை விண்கலம் அனுப்பிய நாடுகள், ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை மட்டுமே. சீனா செவ்வாய்க்கு அனுப்பிய யுங்ஹோ விண்கலம் தோல்வியில் முடிந்தது. இஸ்ரோவின் சாதனை, செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய முதல் ஆசிய விண்வெளி ஏஜென்ஸி என்பது மட்டுமல்ல, அதில் அது செய்த டெக்னலாஜிக்கல் சாதனைகளும் தான்.
 
மங்கள்யான் மிகக் குறைந்த செலவில், மிகக் குறைந்த எரிபொருள் செலவில் செவ்வாய்க்குச் சென்றுள்ளது. நிலவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை விட, பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே உள்ள தூரம், 100 மடங்கு அதிகம். ஆனால் நிலவுக்கு ஒரு விண்கலம் செல்ல எத்தனை எரிபொருள் பிடிக்குமோ, அதே அளவு எரிபொருளில் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிச் சாதனை புரிந்துள்ளது இஸ்ரோ. 1998இல் செவ்வாய்க்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம் எரிபொருள் தீர்ந்து, விண்வெளியில் காணாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.
 
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் "செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்ப ஆன செலவு, கிராவிட்டி எனும் ஹாலிவுட் படத்தை எடுக்க ஆன செலவை விடக் குறைவே". ஒரு சராசரி ஹாலிவுட் படம் எடுக்க இன்று நூறு மில்லியன் டாலர் ஆகும். ஆனால் மங்கள்யான் வெறும் $74 மில்லியன் செலவில் செவ்வாய்க்குச் சென்றுள்ளது. சமீபத்தில் செவ்வாய்க்குச் சென்ற மேவன் எனும் நாசா விண்கலம், சுமார் ஏழு பில்லியன் டாலர் செலவில் சென்றுள்ளது.

webdunia
 
இத்தகைய தொழில்நுட்பச் சாதனையை இஸ்ரோ எப்படி சாதித்தது?
 
ஒரு விண்கலனை மேலே எழுப்பத் தான் எரிபொருளில் பெரும் பங்கு செலவாகும். அதன்பின் விண்வெளியில் பயணம் செய்யவும் எரிபொருள் அவசியம். நாசா, ஐரோப்பிய ஸ்பேஸ் எஜென்ஸி விண்கலன்கள் விண்வெளிக்குச் சென்ற பின்னும் எரிபொருளைப் பயன்படுத்தி எங்கேயும் நிற்காமல் நேராகச் செவ்வாய் சென்றன.
 
ஆனால் மங்கள்யான் புவியீர்ப்பு விசையையையும், விண்வெளியின் எடையற்ற தன்மையையும் மிக அழகாகப் பயன்படுத்தியது. இதன்படி பூமிக்கு மேலே உயர்ந்த மங்கள்யான், உடனே செவ்வாய் செல்லாமல் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரத் தொடங்கியது. பூமி எப்படி சூரியனைச் சுற்றிவர எரிபொருள் தேவையில்லையோ, அதே போல் மங்கள்யான் பூமியைச் சுற்றி வரவும் எரிபொருள் தேவைப்படவில்லை. இப்படியே மங்கள்யான் பூமியை மணிக்குப் பல்லாயிரம் மைல் வேகத்தில் சுற்றிவரும் சூழலில் கொஞ்சம், கொஞ்சமாக மங்கள்யானின் நீள்வட்ட பாதையை விரிவுபடுத்தி ஒரு கட்டத்தில் மங்கள்யானின் எஞ்சினை இயக்கி, மங்கள்யானைச் சூரியனை நோக்கித் தள்ளியது இஸ்ரோ. செவ்வாய், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் தருணம் இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

webdunia
(செவ்வாய்: மங்கள்யான் எடுத்த புகைப்படம்)
 
அந்த ஒரே உந்தில் சூரியனை நோக்கி விரைந்த மங்கள்யானுக்கு அதன்பின் எரிபொருள் தேவைப்படவில்லை. காரணம் மங்கள்யானை அதன்பின் சூரியனின் ஆகர்ஷண சக்தி தன்னை நோக்கி இழுத்தது. இந்தச் சூழலில் செவ்வாய், சூரியனுக்கு அருகில் வரவும் எஞ்சினை மீண்டும் இயக்கி, தன் வேகத்தைக் குறைத்து, செவ்வாயை நெருங்கி அதன் ஈர்ப்பு விசையால் செவ்வாயைச் சுற்றிவரத் தொடங்கியது மங்கள்யான். இது நிகழ்ந்ததும் மங்கள்யான் தன் நோக்கத்தை எட்டிவிட்டது. 
 
ஆக, மங்கள்யானின் வெற்றி வெறுமனே "நானும் செவ்வாய்க்குப் போனேன்" என இல்லாமல் தொலைதூர விண்வெளிப் பயணங்களை மிகக் குறைந்த எரிபொருள் செலவில் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி எப்படி சாதிக்க முடியும் என்பதை உலகுக்கே சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்து உள்ளது. அவ்விதத்தில் மங்கள்யான் இந்தியாவின் மிகப் பெரும் வெற்றிச் சின்னம் என்பதில் சந்தேகம் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil