சென்ற வருடம் பதவி ஏற்ற அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் (நம் ஊர் வெளியுறவுத் துறை அமைச்சருக்குச் சமம்) ஜான் கெர்ரி, யாராலும் தீர்க்க முடியாத இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சனையைத் தீர்க்க ஆசைப்பட்டார். அதற்கு ஒரு காரணம் அப்படி செய்தால் நோபல் பரிசு கிடைக்கும் என்பது. ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று தோற்றவர், ஜான் கெர்ரி. இந்தப் பிரச்சனையை தீர்த்தால் வரும்காலத்தில் என்னவோ.. யார் கண்டா?
பாலஸ்தீனம் இரு அமைப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜூடேயா / சமாரியா எனப்படும் வெஸ்ட்பாங் பகுதி, அப்பாஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. காஸா பகுதி, ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் இடையே இருக்கும் விரோதத்தால் இந்த இரு பகுதிகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இவர்களில் அப்பாஸ் அமைதிப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவர். ஹமாஸ், ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட அமைப்பு.
இஸ்ரேலிய அதிபர் பீபி நெதன்யாகு, முன்பு பதவியில் இருந்த ஏரியல் ஷரோனைப் போல் அல்லாமல் காம்பரமைஸ் செய்துகொள்வார் எனக் கெர்ரி நம்பினார். அதனால் முதலில் அப்பாஸிடம் பேச்சு வார்த்தையைத் துவக்கினார். அப்பாஸ் அப்போது "பேச்சுவார்த்தை எல்லாம் வேலைக்கு ஆகாது. ஐநா சபையில் மனுபோட்டு பாலஸ்தீனத்தை உறுப்பினர் நாடாகச் சேர்க்க வேண்டும்" எனத் திட்டம் போட்டிருந்தார். கெர்ரி பேச்சுவார்த்தை என்றதும் அப்பாஸ் கீழ்க்காணும் நிபந்தனைகளை விதித்தார்:
-
ஜெருசலெம், வெஸ்ட் பாங்க் பகுதியில் புதிதாக எந்த இஸ்ரேலிய குடியிருப்பும் உருவாகக் கூடாது.
-
1967இல் இஸ்ரேல் கைப்பற்றிய எல்லைகளை அடிப்படையாக வைத்து தான் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும்.
-
சிறையில் இருக்கும் 104 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்யவேண்டும்.
கெர்ரி, பிபியைக் கேட்காமல் கொடுத்த வாக்குறுதிகள்:
-
புதிய குடியிருப்புகள் அமைப்பது நிறுத்தப்படாது. ஆனால் அவற்றின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்!!!
-
1967 எல்லையை அடிப்படையாக வைத்துப் பேசலாம். ஆனால் அந்த எல்லையில் "சில கொடுக்கல் வாங்கல்" இறுதியில் இருக்கலாம்.
-
சிறையில் இருக்கும் 104 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்ய பிபியிடம் சொல்கிறேன்.
-
இவை எல்லாம் நிகழ்ந்தால் பாலஸ்தீனம், ஐநா சபையில் விண்ணப்பம் போடக் கூடாது
இதற்கு அப்பாஸ் ஒத்துக்கொண்டதும் பீபியிடம் போனார் கெர்ரி.
பீபிக்குத் தன் சமாதான முயற்சிகளுக்கு யாரும் நற்பெயர் கொடுப்பதில்லை என்ற கோபம் இருந்தது. அவர் இதற்கு முன்பு, 10 மாதம் எந்தக் குடியிருப்பும் கட்ட மாட்டேன் எனச் சொன்னார். அதனால் எந்தப் பலனும் விளையவில்லை.
பாலஸ்தீனம் என ஒரு நாடு அமையலாம் என்ற "இரு நாடுகள்" தீர்வை ஏற்கும் இஸ்ரேலிய தலைவர்களில் அவரும் ஒருவர். 1967 எல்லையைக் கூடப் பேசித் தீர்க்கலாம் எனும் முடிவுக்கும் அவர் வந்திருந்தார். ஆனால் அதை வெளியே சொன்னால் பூகம்பமே வெடிக்கும் என்பதால் அதைச் சொல்லாமல் இருந்து வந்தார்.
இந்தச் சூழலில், கெர்ரி 104 பாலஸ்தீனர்களை விடுவிக்கச் சொல்கிறார். அவர்களில் பலர், இஸ்ரேலியர்களைக் கொன்றவர்கள். அவர்களை விடுவித்தால் பதிலுக்கு என்ன கிடைக்கும்? மறுபடி வெட்டியாக ஒரு பேச்சு வார்த்தை. அப்பாஸுடன் உட்கார்ந்து பேசவே 104 பேரை விடுவிக்க வேண்டுமா?
"104 பேரை விடுவிக்கும் பேச்சே கிடையாது" எனச் சொல்லிவிட்டார் பீபி. ஆனால் ஐரோப்பிய யூனியன் இஸ்ரேலின் 1967 எல்லைகளில் இருந்த பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை மறுக்கும் என்ற தகவலை கெர்ரி நைசாகக் கசியவிட்டார். யோசித்துப் பார்த்த பீபி, பேச்சுவார்த்தையில் இறங்குவது மாதிரி ஒரு நாலைந்து மாதத்தை ஓட்டினால் ஐரோப்பிய யூனியன் அந்த முயற்சியைக் கைவிடும் எனத் திட்டம் போட்டார்.
"சரி 104 பேரை விடுதலை செய்கிறேன். ஆனால் உடனே செய்ய மாட்டேன். 25 பேராக நாலு பாட்சுகளில் விடுதலை செய்வேன். அதுவும் பேச்சு வார்த்தை வெற்றிகரமாகத் தொடர்ந்தால் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பாட்ச் விடுதலை ஆகும்" என்றார்.
நோபல் பரிசு, கெர்ரியின் கண்முன் நிழலாடியது!! யாரும் சாதிக்காத வெற்றியை அவர் சாதிக்கப் போகிறாரா?
"இதுக்குப் பதிலா ஒரே ஒரு பதில் கோரிக்கை" எனப் பீடிகை போட்டார் பீபி.
"ஒரு 2000 அபார்ட்மெண்ட் மட்டும் புதுசா வெஸ்ட் பாங்கில் கட்டிக்குவோம்" என்றார்.
ஏற்கனவே "புதுக் குடியிருப்புகள் அமைக்கும் வேகம் மட்டுப்படுத்தப்படும்" என மழுப்பலாக அப்பாஸுக்கு வாக்குறுதி கொடுத்தது, கெர்ரிக்கு நினைவு வந்தது.
"சரி" எனத் தலை ஆட்டினார்.
அப்பாஸிடம் மறுபடி கெர்ரி போனபோது, பூகம்பமே வெடித்தது.
"யாரைக் கேட்டு 2000 புதுக் குடியிருப்பு அமைக்க அனுமதி கொடுத்தீர்கள்?" எனச் சத்தம் போட்டார் அப்பாஸ்.
"குடியிருப்பு என்பது வீடுதான். கட்டி முடிச்சாலும் 1967 எல்லை ஒப்பந்தபடி மறுபடி அந்தப் பகுதி எல்லாம் உங்களுக்குத் தான் வரும். அப்ப அந்த வீடுகளை இடிச்சுடலாம்" எனச் சொல்லிப் பார்த்தார் கெர்ரி
ஒத்துக்கொள்ளாமல் கடுமையாகச் சத்தம் போட்டார் அப்பாஸ்.
"104 பேரை விடுவிக்க இஸ்ரேலி அமைச்சரவை தீர்மானம் போட வேண்டும். 1967 எல்லைப் பகுதியைக் கொடுப்பதாக இஸ்ரேல் வாக்குறுதி கொடுக்க வேண்டும். அப்படி ஒரு அனுமதி கடிதத்தைப் பீபியிடம் வாங்கி வாருங்கள். அப்புறம் பேசலாம்" என்றார்
பீபியும் "2000 புதிய குடியிருப்புகளை அமைப்போம். 1993இல் இருந்து 20 வருடமா ஜெயிலில் இருக்கும் 104 பாலஸ்தினியர்களை விடுதலை செய்வோம்." எனச் சொல்லி அமைச்சரவையில் அனுமதி கேட்டார். 2000 எதிர் 104 என்ற டீல், இஸ்ரேலிய காபினட்டுக்குப் பிடிக்கவில்லை. அப்போது பீபி "இந்த 2000 என்பது உடனடி குடியிருப்பு. அதுபோக நீண்ட கால அடிப்படையில் அமைக்கும் குடியிருப்பு தனி. அதை இன்னொரு டிராக்கில் கட்டுவோம்" எனச் சொல்லி, காபினட்டில் அனுமதி வாங்கினார்
அதன்பின் கெர்ரி மிக நெருக்கியதால், "1967 எல்லைப் பகுதியை அடிப்படையாக வைத்துப் பேசுவோம்" என மொட்டையாக ஒரு கடிதத்தையும் கொடுத்தார். கொடுத்து இது இஸ்ரேலிய பத்திரிக்கைகளில் லீக் ஆனால் அதன்பின் பேச்சுவார்த்தை நடத்த, தான் பிரதமராக இருக்க முடியாது என்பதால் இதை அப்பாஸிடம் காட்டிவிட்டு, உடனடியாகத் திரும்பக் கொண்டு வருமாறும் கூறினார்.
அதன்பின் அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் பல மாதங்கள் வீணாகின. இரு தரப்பும் வரைபடங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். இந்த இந்த ஏரியா எனக்கு, இது உனக்கு எனச் சொன்ன மேப்புகள் அவை. ஆனால் இது எதுவும் அதிகாரப்பூர்வமானது அல்ல. சும்மா அடுத்த தரப்பு என்ன சொல்கிறது என்பதைக் கண்டறியும் முயற்சி.
இதற்கு நடுவே இஸ்ரேலிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. இரு தடவைகளில் ஐம்பது பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டார்கள். புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டதால் பாலஸ்தீனியர்கள் கோபம் அடைந்தார்கள். பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டதால் இஸ்ரேலியரகள் கோபம் அடைந்தார்கள். பீபியும், அப்பாஸும் தம் மக்களுக்கு என்ன சமாதானம் சொல்வது எனப் புரியாமல் திண்டாடினார்கள்.
இதுவரை விடுவிக்கப்பட்ட 50 பேரும் சின்ன குற்றங்கள் செய்தவர்கள். இனி விடுவிக்கப்பட இருப்பவர்கள், குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டவர்கள். ஜெர்மானிய வதைமுகாமில் இருந்த யூதர் ஒருவரைக் கொன்ற பாலஸ்தீனியரும் அதில் இருந்தார். அவரை எப்படி விடுவிக்க முடியும் என யோசித்த இஸ்ரேலிய ராணுவம் பேச்சு வார்த்தையை இம்மாதிரி சூழலில் நிறுத்தக் கையாளும் வழக்கமான உத்திகளைக் கையாண்டது.
எல்லைப் புறத் தாக்குதல் என்ற பெயரில் மூன்று பாலஸ்தீனியரைச் சுட்டுக் கொன்றார்கள். பாலஸ்தீனியரும் பதிலுக்கு மூன்று இஸ்ரேலியரகளைச் சுட்டுக் கொன்றார்கள். இரு தரப்பும் தகிக்க ஆரம்பித்தது.
அதன்பின் இஸ்ரேலியர்கள் மீதம் இருக்கும் ஐம்பது பேரை விடுவிப்பதில் இழுத்தடிப்பு காட்டினார்கள். பேச்சுவார்த்தையும் எங்கும் போவது போல் தெரியவில்லை.
கடுப்பான அப்பாஸ், கெர்ரியை அழைத்து "ஹமாஸுடன் ஒப்பந்தம் போட்டு, காஸாவையும் வெஸ்ட் பாங்கையும் ஒரே ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்து, ஐநா சபைக்கு உறுப்பினராக மனு போடுவேன்" என்றார்.
கெர்ரி கெஞ்சிக் கூத்தாடியதும் "ஏப்ரல் 29க்குள் மீதம் இருக்கும் 54 பாலஸ்தீனியரை விடுவிக்க வேண்டும். ஏப்ரல் 29 தாண்டினால் இதைச் செய்தே தீர்வேன்" என்றார்
இதற்குள் இரு தரப்புக்கும் தெரியாமல் கெர்ரி "இஸ்ரேல் 1967 எல்லைப் பகுதியைத் தாண்டிப் பின்வாங்க வேண்டும். கிழக்கு ஜெருசலெம், பாலஸ்தீனத்துக்கு. மேற்கு ஜெருசலம், இஸ்ரேலுக்கு. பாலஸ்தீன அகதிகள், இஸ்ரேலுக்கு வர அனுமதிப்பதில்லை" என்ற திட்டத்தைத் தீட்டி இருந்தார். அதற்கு பீபியிடம் மறைமுக ஒப்புதலும் வாங்கி இருந்தார். இரு நாட்டுத் தலைவர்களையும் இதில் கையெழுத்து இட வைப்பதுதான் பாக்கி.
ஆனால் இது சும்மா பீபி தன்னிடம் சொன்ன பொய் என்பதும், எக்காலத்திலும் அம்மாதிரி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்து போடவே போவதில்லை என்பதும் கெர்ரிக்கு அப்போது தெரியாது.
பீபி இதைதான் செய்வார் என்பது அப்பாஸுக்குத் தெரியும். ஆனால் அவர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட காரணம், இதை வைத்து 104 பாலஸ்தீனியரை விடுவிக்கலாம் என்பதே.
ஏப்ரல் 29ஆம் தேதியும் வந்து போனது. நடுவே நிகழ்ந்து முடிந்த முன்னேற்றங்கள்:
50 பாலஸ்தீனியர் விடுதலை செய்யப்பட்டார்கள். இவர்களில் பலர், தண்டனைக் காலம் முடிய சில மாதங்களே இருந்தவர்கள்.
ஐரோப்பிய யூனியன் விதிப்பதாகச் சொன்ன தடை, விதிக்கப்படாமல் போனது.
2000 புதிய இஸ்ரேலிய குடியிருப்புகள் கட்டப்பட்டன.
கெர்ரி, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல முறைகள் பறந்தார்.
அதன்பின் அப்பாஸ், கெர்ரியை அழைத்தார்.
"ஒன்று பீபி உங்களை நன்றாக ஏய்க்கிறார். அல்லது நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீர்கள்" என்றார்.
"என்னை யாரும் ஏமாற்ற முடியாது"
"அப்புறம் ஏன் 1967 என்ற வார்த்தையையே அவர் பேசாமல் தவிர்க்கிறார்?"
"என்னிடம் அவர் சத்தியமே செய்து கொடுத்தார். லெட்டரே எழுதிக் கொடுத்தார்"
"எங்கே அந்த லெட்டரைக் கொடுங்கள்.."
"அதை அவர் திரும்ப வாங்கிக்கொண்டார்!!!!.."
"54 பேரை எப்ப விடுவிப்பார்?"
"சீக்கிரம்.."
"54 பேரையே உங்களால் விடுவிக்க குடியவில்லை. நீங்கள் தான் எனக்குக் கிழக்கு ஜெருசலத்தை வாங்கிக் கொடுப்பீர்களா?"
கடுப்பான அப்பாஸ், பேச்சுவார்த்தையை நிறுத்தினார். ஐநா சபைக்கு மனு போட்டார். அந்த மனுவில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அதன்பின் அவமானமடைந்த கெர்ரி, இஸ்ரேல் பக்கமே தலைகாட்டவில்லை. அதன்பின் தான் இப்போதைய பாலஸ்தீன - இஸ்ரேல் போர் தொடங்கியது.