நாகரிக மனிதனின் நோய்களும் நவீன மருத்துவமும்
நாகரிக மனிதனின் நோய்களும் நவீன மருத்துவமும்
டைப் 1 & 2 டயபடிஸ், கான்சர், பிளட் பிரஷர், சைன்ஸ், ஆஸ்துமா, இர்ரிடபிள் பவுல் சிண்ட்ரோம், குறட்டை, பல் சொத்தை..... இவையும் இன்னபிற பெயர் தெரியாத வியாதிகளும் பரவலாகக் காணபடுவதால் அவை எல்லாம் நமக்கு வந்துதான் ஆகும் என நாம் நம்பத் தொடங்கிவிட்டோம். என் நண்பர் ஒருவருக்கு டயபடிஸ், அவர் அதற்கு ஒரு மருத்துவரிடம் சென்றார். மருத்துவருக்கே கடந்த 10 ஆண்டுகளாக டயபடிஸ். அவரும் இவருக்கு தான் பின்பற்றும் மருத்துவ அறிவுரைகளைப் பரிந்துரைத்தார். இருவரும் இன்று வாக்கிங், டயட்டிங் என அந்த அறிவுரைகளை பின்பற்றி வருகிறார்கள். இருவருக்கும் குணமான பாடில்லை.
சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த சமூக, கலாசார வழக்கங்களால் பாரம்பரியமாக உண்டுவந்த உணவுகளையும், வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டு புதிய உணவுகளை உட்கொள்ளத் தொடங்கினோம். அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன், இந்திய டயபடிஸ் பவுண்டேஷன் முதலானவை பரிந்துரைத்த உணவுப் பொருட்களை உண்ணத் தொடங்கினோம். வியாதிகள் என்னவோ குறைந்த பாட்டைக் காணோம். இப்போது வியாதிகளுடன் வாழ்வதே நார்மல் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால் பொதுவாகக் காணப்படும் விஷயம் எல்லாம் நார்மல் அல்ல. வியாதிகள் பரவலாக, பொதுவாக இருக்கலாம். ஆனால் அவை நார்மல் அல்ல. வியாதிகள் அற்ற வாழ்க்கையே நார்மலானது.
உங்கள் மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைக்கும் உணவுகள் பலவும் உணவே அல்ல. ஓட் மீல், சீரியல், கொழுப்பு எடுத்த பால், முட்டையின் வெள்ளைக் கரு, சோயாபீன் ஆயில், கனோலா... இவை எதுவுமே உணவு அல்ல. இவை போலி உணவுகள். நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோருக்கு ஸ்கிம் மில்க், எக் ஒயிட், சீரியல் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் உண்ட கொழுப்பு எடுக்காத பால், மாமிசம், முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எல்லாம் இன்று விஷத்துக்குச் சமமாகக் கருதப்பட்டு, புறக்கணிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இப்பரிந்துரைகள், அறிவியலுக்கு முரணானவை என்பது மட்டும் அல்ல, ஆபத்தானவையும் கூட. எப்படி என சில உதாரணங்கள் மூலம் பார்க்கலாம்.
நியுசிலாந்து அருகே டோக்லு என ஒரு தீவு உள்ளது. தீவு முழுக்க மணல். தென்னை மரத்தைத் தவிர பெரிதாக எதுவும் விளைவது இல்லை. தீவுவாசிகளின் உணவு தேங்காயும் மீனும் வேறு சில காய்களும் காட்டு பெர்ரிகளும் மட்டுமே. அவர்கள் உணவில் தினம் ஒரு தேங்காய் இடம் பெறும். இன்றைய மருத்துவம் தேங்காய் உறைகொழுப்பு, ஆபத்து எனக் கூறும். ஆனால் டோக்லு தீவுவாசிகளின் உணவில் 66% காலரிகள் உறைகொழுப்பின் மூலமே வருகிறது. இன்றைய ஹெல்த் ஃபுட்டான "சீரியல், ஓட்மீல், கைகுத்தல் அரிசி, முழு கோதுமை" இவற்றை அவர்கள் கண்ணால் பார்த்தது கூட கிடையாது. டோக்லு தீவுவாசிகள் யாருக்கும் டயாப்டிஸ், கான்சர், பல் சொத்தை, ஆஸ்துமா, அல்சர் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்களை ஆராய்ந்த மருத்துவர்கள் அவர்களது கொலஸ்டிரால் சற்று அதிகமாக உள்ளதே ஒழிய அவர்கள் முழு ஆரோக்கியமாக உள்ளதாகக் கூறுகிறார்கள்.
எஸ்கிமோ டயட் இன்றைய மருத்துவரின் நைட்மேர். (கெட்ட கனவு). துருவ பகுதிகளில் செடி,கொடி, மரம் எதுவும் கிடையாது. வருடத்துக்கு 10- 11 மாதம், எஸ்கிமோக்களின் உணவு சீல், வால்ரஸ் முதலிய உயர்கொழுப்பு நிரம்பிய மிருகங்கள் தான். என்றாவது அதிர்ஷ்டம் இருந்தால் பறவைகளின் முட்டைகள் கிடைக்கும். அதை அப்படியே குடிப்பார்கள். வருடத்துக்கு 1 மாதம் புதர்களில் சில பெர்ரிகள் கிடைக்கும். அதைக் கூட அவர்கள் மரபுப்படி சீல் எண்ணெயில் நனைத்துத் தான் உண்பார்கள். சீல் எண்ணெய் முழுக்கக் கொழுப்பு.
எஸ்கிமோ உணவில் 90%க்கும் மேல் கொழுப்பு. இப்படி இன்றைய மருத்துவ விதிகள் அனைத்தையும் மீறும் எஸ்கிமோக்கள், மாரடைப்பில் தொப், தொப் என விழுந்து சாகிறார்களா?
இல்லை. மிக ஆரோக்கியமாக உள்ளார்கள். நோய்வாய்ப்படுவது எல்லாம் நகர்ப்புறத்தில் குடியேறி ரொட்டி, பர்கர், பீட்சா சாப்பிடும் நாகரிக எஸ்கிமோக்கள் தான். 19ஆம் நூற்றாண்டு இறுதியில் எஸ்கிமோக்களிடையே கான்சர் இருக்கிறதா என ஆராயச் சென்ற மருத்துவர் ஒருவர், 24 மாதம் ஆயிரக்கணக்கான எஸ்கிமோக்களை ஆராய்ந்தும் கான்சர் வந்த ஒரே ஒரு எஸ்கிமோவைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியுடன் திரும்பினார்
இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய சில விஷயங்கள்:
மனிதனைத் தவிர உலகில் உள்ள எந்த உயிரினமும் அரிசி, பருப்பு, கோதுமை, அல்வா, கோக், முறுக்கு, பெப்சி, மது வகையறாக்களை உண்பது கிடையாது.
மனிதனைத் தவிர இயற்கையில் வேறு எந்த உயிரினத்துக்கும் தொப்பை, உடல் பருமன், கான்சர், மாலைக்கண், சைனஸ், ஆஸ்துமா, மாரடைப்பு, டயாப்டிஸ் கிடையாது. மனிதனும், மனிதன் கொடுக்கும் உணவை உண்ணும் அவனது செல்லப் பிராணிகளுக்குமே இத்தகைய வியாதிகள் வருகின்றன.
10,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் கண்டுபிடிக்கப்படாத காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதன், 2 மில்லியன் ஆண்டுகளாக (20 லட்சம் ஆண்டுகள்) பிணியற்ற பெருவாழ்வு வாழ்ந்தான். 10,000 ஆண்டுகளில் நிகழ்ந்த நாகரிக மாற்றங்களில் அவனது உடலும் உணவும் மாறுதலடைகிறது. எப்படி?
டிஸ்கவர் மேகசினில் வெளியாகியுள்ள கட்டுரையில் பேலியன்டாலஜிஸ்டுகள் பலரை மேற்கோள் காட்டிச் சொல்லப்பட்டு இருக்கும் தகவல்:
2 மில்லியன் ஆண்டுகளாக வளர்ந்து வந்த மனிதனின் மூளை சைஸ் கடந்த 10,000 ஆன்டுகளில் சுருங்கிவிட்டது. எந்த அளவு? ஒரு டென்னிஸ் பந்து அளவு பகுதியை மனித மூளை இழந்து உள்ளது.
மூளையின் சைஸ் இந்த அளவு சுருங்கியதால் உடலின் தசைகள், மனிதனின் உயரம் முதலானவையும் அளவில் குறைந்துவிட்டன.
கடந்த 10,000 ஆண்டுகளில் மனிதன் ஸ்மார்ட் ஆகவில்லை. முன்பை விட முட்டாள் ஆகிவிட்டான். இது டொமெஸ்டிகேஷன் ஆஃப் ஷீப் உதாரணத்தை வைத்து விளக்கப்படுகிறது.
மூளையின் சைஸ் இழப்பு, இதே ரீதியில் தொடர்ந்தால் இன்னும் 20,000 ஆண்டுகளில் மனிதனின் மூளை அளவு 1100 சிசி அளவு சுருங்கும். இது அரை மில்லியன் ஆன்டுக்கு முன் வசித்த ஹோமோஎரெக்டஸ் எனும் பாதி குரங்கின் மூளை அளவை ஒத்ததாகும்.
2 மில்லியன் ஆண்டுகளாக வளர்ந்து 1500 சிசியை அடைந்த மனிதனின் மூளை அளவு கடந்த 10,000 ஆன்டுகளில் 1350 சிசி அளவுக்கு ஏன் வீழ்ந்தது???
2 மில்லியன் ஆண்டுகளாக மனிதனின் பிரதான, முதன்மை உணவு மாமிசம்.
கடந்த 10,000 ஆண்டுகளில் விவசாயம் அறிமுகம் ஆகிறது. தானிய உணவை மனிதன் உண்ணத் தொடங்குகிறான்.
மாமிசம் மனிதனின் காலரி தேவைகளில் பெரும்பான்மையைப் பூர்த்தி செய்த காலம் மாறி, தரக் குறைவான தானிய புரதமும், அதில் உள்ல க்ளூட்டன் முதலான ஆபத்தான புரதங்களும், நச்சுக்களும் அவன் உடலை நிரப்புகின்றன.
அதன் விளைவே இவை அனைத்தும்.
மாமிச உணவு நம்மைக் குரங்கு எனும் நிலையில் இருந்து மனிதன் எனும் நிலைக்கு உயர்த்தியது
நம் மூளை அளவு 1500 சிசி அளவு உயர்ந்தது. அந்தச் சூழலில் தானிய உணவு அறிமுகம் ஆகிறது
அது நம்மை மனித நிலையில் மீண்டும் குரங்கு நிலைக்குத் தாழ்த்துகிறது. நாகரிக மனிதனின் வியாதிகள் நம்மைச் சூழ்கின்றன.
இந்தச் சூழலில் 20ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் அதுநாள் வரை மிக ஆரோக்கியமான உணவுகளாகக் கருதபட்ட மாமிசம், முட்டை, தேங்காய், நெய் முதலானவை தவறான உணவுகளாகவும், உணவே அல்லாத எக் ஒயிட், வெஜிட்டபிள் ஆயில், பன், சீரியல் முதலானவை ஆரோக்கிய உணவாகவும் கருதப்படுகின்றன. மனிதனின் வீழ்ச்சி பரிபூரணம் ஆகிறது, வியாதிகள் நம்மைச் சூழ்கின்றன.
இதை நாம் எதிர்கொண்ட விதம், வருத்தத்துக்கு உரியது. உணவால் வந்த வியாதியை மருந்தால் குணப்படுத்த முயன்றோம். கொலஸ்டிரால் குறைப்பு ஸ்டாடின்கள், சர்க்கரை குறைப்பு, இன்சுலின் ஊசிகள், மெட்பார்மின்கள் சந்தையில் கொடிகட்டி பறக்கின்றன. இவற்றை உண்ண, உண்ண, நோய் அதிகமாகிறதே ஒழிய குறையவில்லை. உணவு என்ற பெயரில் கெமிக்கல்கள், அதில் வரும் வியாதியைக் குணப்படுத்த மேலும் மருந்து என்ற பெயரில் கெமிக்கல்கள், அதன் பின்விளைவால் மேலும் வியாதிகள், அவற்றைக் குணபடுத்த மேலும் கெமிக்கல்கள் என ரசாயனங்கள் மூலமே உயிர்வாழும் ஒரு தலைமுறை உருவாகி வருகிறது.
இதில் இருந்து விடுபட்டு, நாகரிக மனிதனின் வியாதிகள் வராமல் தற்காத்துக்கொள்வது எப்படி என்பதையும், வந்த வியாதிகளை மருந்துகள் இன்றி நம் முன்னோர் வாழ்க்கை முறையால் குணமாக்குவது எப்படி என்பதையும் ஆராய்வோம்.