திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது. இதை முன்னிட்டு வெளி மாநில பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக கருதப்படுவது திருச்செந்தூர் ஆகும்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா கடந்த 20ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கபூர், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூர் வந்த பக்தர்கள் கடலில் நீராடி விரதம் தொடங்கி அங்கு தங்கி தொடர்ந்து வருகின்றனர்.
விழாவின் சூரசம்ஹாரம் அக்டோபர் 25ஆம் தேதியான நாளை மாலை நடக்கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள், நண்பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாரதனை, 12.45 மணிக்கு தங்க சப்பரத்தில் ஜெயந்தி நாதர் யாகசாலையில இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேலதாளங்கள் முழங்க சண்முக விலாசம் வருதல் நடக்கிறது.
இதை முன்னிட்டு பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்த கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கோவிலின் அருகில் பக்தர்கள் கூட்டம் கடலென திரண்டு வருகின்றனர்.