Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவெல்லாம் சிவனாக!

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (15:18 IST)
மனிதத்தன்மையின் வளர்ச்சி, சக்தி மேல் நோக்கி நகர்தலை அடிப்படையாகக் கொண்டது. ஆத்ம சாதனைகள் எல்லாமே அதற்காகத்தான். அந்த நோக்கத்தில் மஹாசிவராத்திரி நாளை முழுமையாய் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! - சத்குரு.



“வரலாற்று நிகழ்வுகளையும், வெற்றிகளையும், வாழ்வோடு பின்னிப் பிணைந்த அம்சங்களையும் கொண்டாட பல விழாக்கள் உள்ளன. அதில் மஹாசிவராத்திரி விழா, மிகவும் வித்தியாசமானது, முக்கியமானது. ஆன்மீகப் பாதையில் பயணிப்பவர்களுக்கு மட்டுமல்ல, குடும்பச் சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கும்கூட மஹாசிவராத்திரி முக்கியத்துவம் வாய்ந்தது.

உங்களில் நிறையப் பேர் சிவனை எல்லாவற்றுக்கும் மேலான கடவுள் என்றே பார்க்கிறீர்கள். ஆனால் சிவபுராணத்தில், மற்ற மனிதர்களைப் போலவே வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து வந்தவராகவே அவர் இருக்கிறார். மிக மிக வசீகரமானவராக. அருவெறுப்பைத் தருபவராக, பெரும் யோகியாக, சாதாரண குடும்பஸ்தராக, ஒழுக்கசீலராக, குடிபோதையில் தள்ளாடுபவருமாக, நல்ல நடன வித்தகராக, அசைவற்று நிச்சலனமாய் நெடுங்காலம் இருப்பவருமாக அவர் இருக்கிறார். கடவுளர்களும் அவரை வழிபடுகின்றனர், பிசாசுகளும் துர்தேவதைகளும் சிவனை வணங்குகின்றனர்.




ஏன் இப்படி உருவகப்படுத்தப்பட்டது? இப்படிப்பட்ட ஒரு மனிதரை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால் நீங்கள் வாழ்க்கையை வெகுசுலபமாய்க் கடந்து விடுவீர்கள். மிக மிக அழகானவன், அதேநேரத்தில் மிகவும் கொடூரம். பிரபஞ்சத்தில் நீங்கள் கண்டு உணரக்கூடிய எல்லாத் தன்மைகளும் கலவையாய் சிவனிடத்தில் குடிகொண்டு இருந்தது. ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் முழுப் போராட்டமும், அழகானதை, நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ள நேரும் அவஸ்தையில்தான் உள்ளது. சிவன் எல்லாத்தன்மைகளும் ஒன்றாய் கலந்த கலவை.

சிவராத்திரி நாள், சிவனின் திருமணம் நடந்த நாள். குடும்பச் சூழலில் உள்ளவர்கள் அந்த நாளை அப்படித்தான் கொண்டாடுகிறர்கள். ஆன்மீகப் பாதையில் பயணிப்பவர்கள், மஹாசிவராத்திரி நாளை, சிவன் கைலாய மலையுடன் ஐக்கியமான நாளாகக் கொண்டாடுகின்றனர். ஏனென்றால், அவர் ஒரு மலையைப் போல அசைவற்று, முற்றிலும் நிச்சலனமான நாள் அது. பல்லாயிரம் வருட தியானத்திற்குப் பிறகு அவர் முழுமையாய் நிச்சலன நிலையான நாள்தான் மஹாசிவராத்திரி நாள். எனவே ஆன்மீகவாதிகள் அந்த நாளை நிச்சலனத்துக்கான நாளாகக் குறிப்பிடுகின்றனர்.

ஒவ்வொரு மாதத்தின் 14ம் நாளும் சிவராத்திரி நாள்தான். இதில் மாசி மாத சிவராத்திரி, மஹாசிவராத்திரி என அழைக்கப்படுகிறது. ஆன்மீகப் பாதையில் பயணிப்பவர்கள், அந்த நாளில் ஆத்ம சாதனையில் ஈடுபடுவர். ஏனென்றால், மனித உடலில் சக்தி இயல்பாகவே அந்நாளில் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது. புராணங்கள், ‘நிமிர்ந்த முதுகுகொண்டோர் பேறு பெற்றோர்’ என்று சொல்கின்றன. நீங்கள் இன்னமும் படுக்கைவாட்டில் முதுகுத் தண்டை கொண்ட ஜீவராசியாக இருந்தால் இந்த நாளை பயன்படுத்திக்கொள்ள முடியாது. ஆனால், முதுகு நிமிர்ந்த உயிரினமாக நீங்கள் இருந்தால், மஹாசிவராத்திரி நாளில் எந்தவித முயற்சியும் இன்றி சக்தியை மேல் நோக்கி நகர்த்தலாம்.

மஹாசிவராத்திரி நாள், ஆண்டுக்கொருமுறை வருகிறது. அந்தநாளில் இரவு முழுவதும் உறங்காமல், ஆத்ம சாதனைகளைச் செய்வதே சாதகர்களின் விருப்பமாய் இருக்கிறது. அந்த நாளில் செய்யப்படும் ஆத்ம சாதனைகளுக்கு இயற்கையின் உறுதுணை மிகவும் அதிகம்.

தொடர்புடைய செய்திகள்

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – கன்னி!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – சிம்மம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – கடகம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – மிதுனம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – ரிஷபம்!

அடுத்த கட்டுரையில்
Show comments