சென்னையில் அறிமுகம் இல்லாத மூதாட்டியிடம் குழந்தையை போட்டுவிட்டு ஒரு இளம்பெண் தப்பித்து ஓடியுள்ளார். அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
சென்னை காரப்பாக்கம், இந்திராநகரில் வசிப்பவர் கடும்பாடி. இவரது தாய் நாகம்மாள். இவருக்கு கண் பார்வை சற்று குறைவு. இந்நிலையில், நாகம்மாள் வீட்டுக்கு ஆண் குழந்தையுடன் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்து ஏதாவது வேலை கொடுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு மூதாட்டி நாகம்மாள், இங்கு வேலை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது, அவருக்கு கண் பார்வை குறைவு என்பதை அறிந்த இளம்பெண், நாகம்மாள், வைத்திருந்த சேலை ஒன்றை எடுத்து தொட்டில் கட்டி குழந்தையை அதில் போட்டுள்ளார்.
பின்னர் பால்புட்டி, 2 பிஸ்கட் பாக்கெட்டுகளை குழந்தை அருகில் வைத்துவிட்டு இளம்பெண் அங்கிருந்து தப்பிவிட்டார். இதனிடையே நாகம்மாளை பார்க்க அவரது உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது தொட்டிலில் குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், நாகம்மாளிடம் விசாரித்தபோது எனக்கு தெரியாது என்றார். இதையடுத்து, இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த பின், காரப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய அந்த இளம்பெண்ணை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.