சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமார் என்ற இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
நேற்று காலை நீதிபதி சங்கர் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. இதன் பின்னர் ராம்குமாரை தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள், ராம்குமார் தங்களிடம் என்ன பேசினார் என்பதை தெரிவித்தனர். நான் தங்கியிருந்த மேன்சனுக்கு அருகில் தான் சுவாதியின் வீடும் இருந்தது. அந்த மேன்சன் வழியாக அவர் செல்லும்போது இயல்பாக எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது.
நானும் சுவாதியும் நல்ல நண்பர்களாக இருந்தோம். அந்த வழியாக சுவதி செல்லும் போது தினமும் பார்த்து பேசுவோம். ஆனால் சம்பவம் நடந்த அன்று காலையில் நான் எனது மேன்சனில்தான் இருந்தேன். சுவாதியை அன்று நான் சந்திக்கவே இல்லை.
சுவாதி படுகொலை செய்யப்பட்ட செய்தியை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எப்போதும் ஊருக்கு செல்வதுபோல் அன்றும் எனது ஊருக்கு வந்து விட்டேன். இந்த கொலையில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை.
அன்று இரவு காவல்துறை உடையிலும், சாதாரண உடையிலும் ஒரு 20 பேர் என்னை தாக்க வந்தனர். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதே எனக்கு தெரியாது. மேலும் நான் கழுத்தை அறுத்துக்கொள்ள எந்த சூழ்நிலையிலும் முயற்சிக்கவில்லை என ராம்குமார் கூறியுள்ளார்.