சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன், தற்போதைய அரசியல் குறித்து கிண்டலாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த இலக்கிய மேடையிலும் மிகவும் வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்துபவர் எழுத்தாளர் ஜெயமோகன். அராத்து என்பவர் எழுதிய 6 புத்தகங்களின் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 7ம் தேதி நடைபெற்றது. அதில் ஜெயமோகன் கலந்து கொண்டு பேசியதாவது:
தற்போது எல்லோரும் முகநூலில் அதிகம் படிக்கிறார்கள். இவ்வளவு படிப்பவர்கள் நாவல், சிறுகதைகள் பற்றி நன்றாக படித்து விட்டு கருத்து தெரிவிக்க வேண்டும். எப்படி எழுதினாலும் அதில் இலக்கியம் இருக்க வேண்டும்.
கிராமங்களில் வேலையே செய்யாமல் நூறுநாள் வேலை திட்டத்தில் மக்கள் ரூ.100 பெற்று வருகிறார்கள். நாம் அவர்களை அப்பாவிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி மக்களை திருட அனுமதிக்கும் தலைவர்களை ‘ அம்மா’ என அழைக்கிறார்கள்.
இன்று ‘சின்னம்மா’வின் முன்பு கைகட்டி நிற்பவர்களை அப்பாவிகள் என நினைத்து விடாதீர்கள். அவர்கள் ஏழைகளோ, அப்பாவிகளோ அல்ல. அவர்களுக்கு நன்றாக தொழில் தெரியும். அவர்கள் முன்பு மைக்கை நீட்டியவுடன் ‘எங்களை வாழ வைத்த அம்மா’ என கூறுகிறார்கள். பொதுச்சொத்தை திருடுவதற்கு அம்மா எங்களுக்கு அனுமதியளித்தார் என்பதுதான் அதன் அர்த்தம்’ என காட்டமாக பேசினார்.