அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தும், சசிகலாவை ஆட்சி அமைக்க ஏன் அழைக்கவில்லை என்பதற்கு வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட பின், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ஸிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை சசிகலா தரப்பு பெற்றது. இதுபற்றி, ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் கூற தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. தமிழக முதல்வர் பதவிக்கு சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் முன்னிறுத்தினர். அதற்கான ஆதரவு கடிதங்களும் அதிமுக எம்.எல்.ஏக்களிடமிருந்து பெறப்பட்டு, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுக்கப்பட்டது.
ஆனால், ஒரு வார காலமாகியும் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதற்கு அதிமுகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று சிறைக்கு சென்றுவிட்டார். அவரின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகிவிட்டார்.
இந்நிலையில், ஒரு ஆங்கில இணையதளத்திற்கு வித்யாசாகர் ராவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சமிபத்திய அரசியல் சூழ்நிலைகளில், ஊடகங்களிலும், செய்திகளிலும் என் பெயர் விமர்சனத்திற்கு உள்ளானது போன்று எனது 45 வருட கால அரசியல் வாழ்கையில் இதுவரை விமர்சிக்கப்பட்டதில்லை. சசிகலாவிற்கு நான் ஏன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை என்ற என் முடிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
சசிகலா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி இல்லை. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பு விரைவில் வெளியாகவிருந்த சூழ்நிலையியில், நான் அவரை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக, நான் எந்த முடிவையும் எடுக்கும் முன், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரை காத்திருப்பதே எனக்கு சரியெனப்பட்டது” என அவர் கூறினார்.