தமிழகத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் திடீரென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இலங்கை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் கடந்த ஜூன் 30-ம் தேதி வயது மூப்பு காரணமாக காரணம் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு நேற்று நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் அண்ணாமலை அவசர அவசரமாக இலங்கை சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இரா சம்பந்தன் இறுதிச்சடங்கில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ், முஸ்லிம், சிங்கள கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரா சம்பந்தன் அவர்களது வீட்டில் உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர் என்பதும் தமிழ் மக்கள் திரளாக வந்து அவருடைய உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 30-ம் தேதி இரா சம்பந்தன் காலமான நிலையில் அவரது உடல் இலங்கையில் உள்ள பல பகுதிகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலில் கொழும்பு, அதன் பின்னர் யாழ்ப்பாணம் ,அதன் பின்னர் திரிகோணமலை ஆகிய பகுதிகளில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது என்பதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்பட பல அரசியல் பிரபலங்கள் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.