Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நா.முத்துக்குமாருக்கு இப்போதுதான் புரிந்திருக்கும் : தங்கர்பச்சான் வேதனை

நா.முத்துக்குமாருக்கு இப்போதுதான் புரிந்திருக்கும் : தங்கர்பச்சான் வேதனை
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (10:55 IST)
சமீபத்தில் மரணமடைந்த கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா. முத்துகுமாரை பெற்றி இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:


 

 
தலையில் இடி விழுந்ததுபோல் என்று சொல்வார்களே, அது இதுதானா?. கல்லூரியில் படிக்கிறான் எனச்சொல்லி முத்துக்குமாரை அவனது அப்பாதான் 1993-ம் ஆண்டில் எனது “வெள்ளைமாடு” நூல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தினார். 24 மணி நேரமும் எழுத்து, சிந்தனை, புத்தகம் என்றே அலைந்தவன். என்னை உரிமையுடன் கண்டிப்பவனும், இறுதிவரை எனக்கு உண்மையாய் இருந்தவனும் தம்பிதான்.
 
அவனிடம் நான் அன்பு காட்டியதைவிட அதிகமாக திட்ட மட்டுமே செய்திருக்கிறேன். ஓய்வற்ற அவனது உழைப்பு அவனை எங்கே கொண்டு போய்விடும் என்பதையும் எச்சரித்திருக்கிறேன். அவன் உடல்நலத்தைப்பற்றி என்னைவிட கவலைப்பட்டவர்கள் யாராவது இருப்பார்களா எனத் தெரியவில்லை. தூங்காத தூக்கத்தை எல்லாம் சேர்த்து மொத்தமாக தூங்கப்போய்விட்டான் என் முத்து.
 
அவனது பாடல்களும், கவிதைகளும், எழுத்துகளும் மட்டுமே நமக்கு தெரியும். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக நேற்றோடு புகழ்ந்து முடித்துவிட்டோம். “அப்பா என்றுகூட இன்னும் சொல்லவராத இந்த குழந்தையை வைத்துக்கொண்டு இனி என்ன செய்யப்போகிறேன் அண்ணா” என என்னைப் பிடித்துக்கொண்டு கதறிய முத்துக்குமார் மனைவியின் குரலுக்கு இங்கே என்ன பதில் இருக்கிறது?. நான் இருக்கிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடிந்தது.
 
மீண்டும், முத்துக்குமாரைப்போல் அவனது இளந்தளிர்களும் இந்த போலியான உலகத்தில் போராடி கரைசேர வேண்டும். அவன் 1,500 பாடல்கள் எழுதி என்ன சம்பாதித்தான் என எனக்குத்தான் தெரியும். சொந்த பந்தங்களையும், நண்பர்களையும் விட்டுக்கொடுக்காத முத்துக்குமாருக்கு பெரும்பொருளாக அது சேரவேயில்லை. நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. பணமில்லாமல் எதுவும் நடக்காத இந்த நாட்டில் இந்த கவிஞனின் பிள்ளைகளும் அவன் போன்ற பண்புள்ள, சிறந்த மனிதாக வாழ்ந்து காட்டத்தான் வேண்டும்.

webdunia

 

 
இனி முத்துக்குமாரின் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்?. தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு ஒரு பெரிய கதாநாயகனுக்கு தரப்படுகிற சம்பளத்தில் பதினைந்தில் ஒரு பகுதியைத்தான் இந்த 15 ஆண்டுகள் முழுக்க இரவு பகலாக கண்விழித்து சம்பாதித்தான். படைப்பாளிகள் எப்போதுமே பாவப்பட்டவர்கள்தான்.
 
எண்ணற்ற எத்தனையோ படைப்பாளிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு சிறிதும் குற்றவுணர்ச்சி இல்லாமல் அவர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு நினைவுநாளில் மட்டும் பணம் கொடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்துகொண்டு சிலைக்கு மாலை போட்டுக்கொண்டிருக்கிறோம். இவர்கள்தான் தமிழர்கள். இதுதான் தமிழ் பண்பாடு. முத்துக்குமாருக்கு இப்போது புரியும். தனக்கு உடல் முக்கியம், மனைவிக்கு கணவன் முக்கியம், தன் செல்வங்களுக்கு தந்தை முக்கியம், குடும்பத்துக்கு தலைவன் முக்கியம் என்பது.
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கும் இணையம்'' : எச்சரிக்கும் உளவியல் வல்லுநர்