தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த, பொறியியல் மாணவர் ராம்குமார்(24) என்பவரை போலீசார் கைது செய்துள்ளது.
ராம்குமார் ஒருதலையாக சுவாதியை காதலித்திருக்கலாம். அவரின் காதலை சுவாதி ஏற்காமல் இருந்திருக்கலாம். அதனால் ஏற்பட்ட வன்மத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் என சந்தேகிக்கிறார்கள்.
யார் இந்த ராம்குமார் என்பது பற்றி நாம் தெரிந்து கொள்வோம். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மீனாட்சிபுரம் என்கிற கிராமத்தில் வசித்து வந்தவர்தான் ராம்குமார். அவரின் தந்தை பெயர் பரமசிவம். ஒட்டு வீடு, சகோதர சகோதரிகள் என சராசரி ஏழைக் குடும்பம். நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தவர். ஆனால் படிப்பை முழுவதுமாக முடிக்கவில்லை. இன்னும் சில அரியர்ஸ் இருக்கிறது.
எனவே, சென்னை வந்து தற்காலிகமாக ஒரு வேலையை தேடிக்கொண்டு, அப்படியே படிப்பை தொடராலாம் என முடிவெடுத்த ராம்குமார் மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை சூளைமேடு பகுதிக்கு வந்து அங்கிருக்கும் ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார்.
மேலும், ஒரு ஜவுளிக்கடை ஒன்றில் அவர் வேலை செய்து வந்ததாகவும் தெரிகிறது. அப்போதுதான் அதே பகுதியில் இருந்து வேலைக்கு செல்லும் சுவாதி மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் நிலையம், சுவாதி வேலை செய்யும் இடம் என பல இடங்களுக்கு அவர் பின்னாலேயே சென்றுள்ளார். இது தெரிந்தும் சுவாதி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதுபற்றி ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுவாதியின் தோழி எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவில்லை.
தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளும்படி ராம்குமார் தொடர்ந்து சுவாதியை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சுவாதி ஏற்றுக் கொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு, ரயில் நிலையத்தில் சுவாதியை கன்னத்தில் அறைந்துள்ளார். அதை சிலர் பார்த்துள்ளனர். ஆனாலும் இதுபற்றி சுவாதி தன்னுடைய பெற்றோரிடம் கூறவில்லை.
அதையடுத்து, சுவாதி தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னுடைய பையில் அரிவாளோடு அலைந்துள்ளார் ராம்குமார். கடைசியாக ஜூன் 24ஆம் தேதி, சுவாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சந்தித்து, தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் சுவாதி உதாசீனப்படுத்தவே, அதில் கோபமடைந்த ராம்குமார் சுவாதியை வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
அவர் தங்கியிருந்த விடுதி, ரயில் நிலையத்திற்கு மிக அருகில், அதாவது சுமார் 200 மீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. அங்கு சென்று அவர் கொலை செய்த போது அணிந்திருந்த ஆடையை தன்னுடைய அறையில் ஓளித்து வைத்து விட்டு அன்று முழுவதும் விடுதியிலேயே இருந்துள்ளார்.
அதன்பின் அடுத்த நாள், அதாவது ஜீன் 25ஆம் தேதி, தன்னுடை சொந்த ஊரான செங்கோட்டைக்கு சென்றுவிட்டார். அதன்பின் கடந்த ஒரு வாரமாக, இந்த கொலை பற்றிய செய்திகளை, செய்தித்தாள்களில் படித்து வந்துள்ளார்.
அவர்தான் குற்றவாளி என்று தெரிந்து கொண்ட போலீசார், அவரை நேற்று காலையிலிருந்து கண்காணித்து வந்தனர். அவர் தன்னுடைய வீட்டில் வளர்க்கும் ஆடுகளை மேய்த்துவிட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அதன்பின் இரவு 11 மணிக்கு போலீசார் அவரின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்ய முயற்சி செய்யும் போது, பிளேடால் கழுத்துப் பகுதியில் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். ஒரிரு நாட்களில் அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அவரைப் பற்றி அவரது வீட்டின் அக்கம் பக்கத்தினர் கூறும்போது “ ராம்குமார் மிகவும் அமைதியானவன். ஒழுக்கமானவன். யாரிடம் அதிர்ந்து கூட பேசமாட்டான். யாரிடமும் எந்த பிரச்சனையும் செய்ததில்லை. அவனா இப்படி கொலை செய்தான் என்பதை நினைக்கும் போது அதிர்ச்சியாய் இருக்கிறது என்று கூறுகின்றனர்.
ராம்குமார் போலீசாரிடம் அளிக்கும் வாக்குமூலத்தில் இன்னும் சில உண்மைகள் நமக்கு தெரிய வரலாம்.