Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?. இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி..!

Ilayaraja Highcourt

Senthil Velan

, புதன், 24 ஏப்ரல் 2024 (15:06 IST)
வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமையின்றி தனது பாடல்களை எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்கள் பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பளித்தார். 
 
இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
 
இதனிடையே படத்தின் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாக எக்கோ நிறுவனம் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபிக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன், இசையமைப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஊதியம் கொடுத்துவிட்டதால் அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும் என தெரிவித்தார்.
 
தயாரிப்பாளரிடம் இருந்து உரிமை பெற்றுள்ளதால் பாடல் தங்களுக்கு சொந்தமாகிவிட்டதாக கூறினார். இதற்கு பதில் அளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் சதீஷ் மற்றும் சரவணன் ஆகியோர், இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது என கூறினர். 
 
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்தது தான் பாடல், வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என்று இளையராஜா தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

 
இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 2ம் வாரத்திற்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்தனர். அதேபோல, பாடல் ஆசிரியர்களுக்கு உரிமை கோர வாய்ப்பு இருக்கிறதா? அதுகுறித்து தங்கள் விளக்கம் என்ன? என்று இளையராஜா தரப்பிடம் கேட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்ரா பவுர்ணமி: வெள்ளியங்கிரி மலையில் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை தீவிரம்