மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வித்தியாசமான செல்கள் அதாவது கலங்கள் மிதப்பதை தாம் கண்டு பிடித்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
111 பேரிடம் நடத்தப்பட்ட சோதனைகளை மையமாகக் கொண்ட இந்த ஆய்வு அறிக்கை உயிரியல் பௌதீகம் குறித்த சஞ்சிகை ஒன்றில் வெளியாகியிருந்தது. இது மாரடைப்பு நோயாளிகளுக்கும், நோயற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை காட்டக்கூடியதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவரது இரத்தத்தில் இந்த பிரத்யேக செல்கள் இருக்கின்றனவா என்பதை அறியும் இந்த பரிசோதனையை வைத்து, ஒருவருக்கு மாரடைப்பு வரக்கூடுமா என்பதை முன்கூட்டியே அறியமுடியுமா என்றும் அவர்கள் தற்போது ஆராய்கிறார்கள்.
கலிபோர்னியாவின் ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் குழு, நோயாளிகளின் குருதிச் சுற்றோட்டத்தில் எண்டோதெலியல் கலங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்தது.
மாரடைப்பு எப்படி உருவாகின்றது என்று பார்த்தால், குருதிக் குழாய்களில் உருவாகும் கொழுப்புப் படிமங்கள் வெடித்து இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. அவை இதயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இரத்த ஓட்டத்தை தடுத்து மாரடைப்பை உருவாக்குகின்றன.
இந்தச் செயற்பாட்டின் போது, எண்டோதெலியல் செல்களும் இரத்தத்தில் வெளியிடப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மாரடைப்பு வந்த பின்னர் 79 நோயாளிகளிடம் செய்யப்பட்ட சோதனைகள், நோயற்ற ஆரோக்கியமாக உள்ள 25 பேர் மற்றும் இரத்தக்குழாய் நோய்களுக்கு சிகிச்சை பெறும் 7 பேருடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் இந்த எண்டோதெலியல் செல்கள் காணப்படுகின்றன என்றும், அது ஆரோக்கியமானவர்களிடம் இல்லை என்றும் கூறுவதற்கான ஆதாரத்தை கண்டு பிடிக்கவே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அந்த இலக்கை தாம் எட்டிவிட்டதாகவும் இந்த ஆய்வுக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் குன் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு நோயின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டு பிடிக்கவும் தமது ஆய்வு உதவும் என்றும் அவர் கூறுகிறார்,