அதிமுக - பாஜக கூட்டணிக்கு நடிகர் விஜய் வருவாரா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள்" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், முதலமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்றும்" குற்றஞ்சாட்டினார்.
நிகிதா தலைமை செயலகத்தில் யாரை தொடர்பு கொண்டார், அங்கிருந்து போலீசாருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்ன, உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றும், ஆனால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஐந்து மாதத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், "தி.மு.க. அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகியும் சாத்தான்குளம் வழக்கை ஏன் தாமதப்படுத்தியது?" என்றும் கேள்வி எழுப்பினார்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள், இன்னும் தேர்தலுக்கு நிறைய நாட்கள் உள்ளன, நல்லதே நடக்கும் என நம்புவோம்" என்று அவர் பதிலளித்தார்.