அமலாக்கத்துறை கைது செய்யும் போது அழுது துடித்து நாடகம் ஆடியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
“டாஸ்மாக் கடைகள் மூலம் எத்தனையோ லட்சம் குடும்பங்கள் அழிந்ததன் விளைவாகதான் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டு அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் அலுவலகத்தில் சோதனை நடந்தபோது, அதிகாரிகள் தங்களது கடமையை செய்கிறார்கள் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வததற்கு ஸ்டாலின் உள்பட திமுகவினர் கண்டனம் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்?. தலைமை செயலகத்துக்குள் புகுந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் அளவுக்கு திராணி இல்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட தலைகுனிவு. இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தைதான் காட்டுகிறது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது லஞ்சம் ஊழலின் உச்சத்தை நிரூபிக்கும் நிகழ்வாகத்தான் மக்கள் இதனை பார்க்கிறார்கள்.
மேலும், செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது அழுது அலறி துடிப்பது போல் நாடகம் ஆடியுள்ளார். கைது செய்யும்போது செந்தில்பாலாஜி அருகில் இருப்பவர்களை காலால் எட்டி உதைக்கும் காட்சிகளும், தனது ஆடையை சரி செய்து கொள்வதும் தெளிவாக தெரிகிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் ஊழல், தற்போது டாஸ்மாக், மின்துறை என பல லட்சம் கோடி ஊழல் செய்திருக்கிறார். இதனால்தான் அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரது கைது விவகாரத்தில் திமுக துணை நிற்பது ஏன்?. செந்தில்பாலாஜி மூலம் அனைவரும் பயனடைந்திருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மேலும் மக்கள் பணிகள் தொடர்பான நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, கைதியை மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் பார்ப்பது எந்த வகையில் நியாயம்?.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள்தான். எனவே, செந்தில்பாலாஜிக்கு உரிய தண்டனையை அமலாக்கத்துறை பெற்றுத்தர வேண்டும். இதை பார்த்த பிறகாவது ஊழல் செய்ய நினைக்கும் மற்ற அமைச்சர்களுக்கு பயத்தை உண்டாக்கும். மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய திமுகவினர், வேலூரில் தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் மரணத்துக்கு துணை நிற்காதது ஏன்?. இதன்மூலம் டாஸ்மாக் கடைகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு துளியும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
வேலூர் சிறுமியின் ஆன்மாவின் சாபமும், குடிப்பழக்கத்தால் கணவனை இழந்த லட்சக்கணக்கான பெண்களின் சாபத்தினால்தான் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார். இனிவரும் காலங்களில் டாஸ்மாக் கடைகளை மூடி, விலைவாசி மற்றும் மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தி, லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை திமுக தரவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாகத்தான் தற்போதைய நிகழ்வு பார்க்கப்படுகிறது. வேலியே பயிரை மேய்ந்தது போல், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே, சட்டம் ஒழுங்கை கேள்வி குறியாக்கி இருப்பது இந்த நிகழ்வின் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது”
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.