அதிமுக மற்றும் தேமுதிக இடையிலானக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை உறுதி செய்யும் விதமாக இரண்டாவது நாளாக இன்று தலைமைக் கட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தேமுதிக வின் ஒவ்வொரு நடவ்டிக்கைகளும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. தேமுதிகவை திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளில் யார் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவரப் போகிறது என்பதுதான் தமிழக அரசியலின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
அதிமுகக் கூட்டண்இயில் புதிதாக இணைந்த பாமக அளவிற்கு தங்களுக்கும் 7 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக சைடில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஏற்கன்வே 12 தொகுதிகளை இழந்துவிட்ட அதிமுக மேலும் 7 தொகுதிகளை இழப்பதற்கு சம்மதிக்க மறுத்தது. இதனால் இருக் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாமல் அப்படியே இழுத்துக்கொண்டு கிடந்தது. இந்த சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த திமுக தலைமை தேமுதிக வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆரம்பித்தது.
ஆனால் இருக் கட்சிகளும் தேமுதிக கேட்கும் 7 தொகுதிகளைக் கொடுக்கத் தயாராயில்லை. அதனால் ஒருக் கட்டத்தில் 5 தொகுதிகள் வரை கொடுப்பதாக சொல்லிப்பார்த்த திமுக தேமுதிகவை இழக்க முடிவு செய்து கூட்டணிப் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து நேற்று கட்சி அலுவலகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவோடு ஆலோசனையில் ஈடுபட்டார் விஜயகாந்த். அதன் பிறகு தேமுதிக அதிமுகவோடுக் கூட்டணி வைப்பது உறுதி என்று செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. அதிமுக கூட்டணியில் தேமுதிக விற்கு 5 சீட்டுகள் மற்றும் தேர்தல் நிதியாக 150 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து நேற்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் அதற்கான சமிக்ஞைகள் எதுவும் தெரியவில்லை.
அதனையடுத்து இன்று இரண்டாவது நாட்களாக மீண்டும் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவோடு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தொடர்ந்து இரண்டு நாட்களாகக் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால் இன்றாவது கூட்டணி உறுதியாகுமா என்பதே தொண்டர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.