தேமுதிக கட்சி அலுவலகத்தில் இன்று கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்று வருவதாகவும் அதில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தேமுதிக இரண்டுக் கட்சிகளில் எந்தக் கட்சி தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவரப் போகிறது என்பதுதான் தமிழக அரசியலின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. முதலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணையையேப் பெருமளவில் நம்பியிருந்தது தேமுதிக. இது தொடர்பானப் பேச்சுவார்த்தை பாஜகவுடன் நடைபெற்று வருவதாகவும் தேமுதிக மாநில செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்திருந்தார். அதனால் அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுக மற்றும் பாமக கூட்டணி இறுதியானவுடன் தேமுதிகவைப் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்ய ஆரம்பித்தது அதிமுக. கூட்டணியில் இணைவது மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தேமுதிக பெரியளவில் நம்பிய பாஜகவும் அவர்களை டீலில் விட்டது. அதனால் திடமான ஆதரவு இல்லாமல் தேமுதிக தத்தளிக்க ஆரம்பித்தது. தொகுதிப் பங்கீட்டில் குறைவானத் தொகுதிகளே வழங்கப்படும் என அதிமுக சார்பில் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த தேமுதிக கூட்டணியை உறுதி செய்யாமல் அமைதிக் காத்தது.
அதிருப்தியடைந்திருந்த தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க தூண்டிலைப் போட்டது திமுக கூட்டணி. இது தொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு விஜயகாந்தின் உடல்நலம் விசாரித்தல் என்றுக் கூறப்பட்டாலும் அந்த சந்திப்புகளில் அரசியலும் பேசப்பட்டதாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக திடீரென டிமாண்ட் உருவானது. தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சி என்பதால் மீண்டும் தேமுதிக வைக் கூட்டணிக்குள் சேர்ப்பதற்கு இரு கட்சிகளும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன.
ஆனால் இருக் கட்சிகளுக்கும் எந்தப் பதிலையும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்தது தேமுதிக. இதற்கிடையில் தேமுதிக கேட்கும் சீட் மற்றும் தேர்தல் நிதி தங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என திமுக கைவிரித்து விட்டதாகக் கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் சுதீஷ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தின் முடிவில் அதிமுக கூட்டணியில் இடம்பெறலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கூட்டணியில் 5 சீட்களும் 150 கோடி ரூபாய் நிதியும் அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் திமுக 3 சீட்களும் 50 கோடி ரூபாய் அளவிற்கே நிதியும் ஒதுக்க முடியும் எனக் கூறியதால் இந்த முடிவை தேமுதிக எடுத்துள்ளதாகத் தெரிகிறது.