தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் குமரி ஆனந்தன் காலமானதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், குமரி ஆனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் மது ஒழிப்புக்காக போராடியவர் குமரி ஆனந்தன் என விஜய் தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து விஜய் மேலும் கூறியதாவது:
ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்;
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர்.
எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குமரி அனந்தன் மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியபோது, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். தமிழே தன் மூச்சென தமிழ் திருப்பணி செய்த குமரி அனந்தன் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.