சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்த ஏரி, கடலூர் மாவட்டத்தின் குடிநீர் தேவையை மட்டுமின்றி சென்னை குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக வீராணம் ஏரியின் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் சென்னைக்கு தினமும் இந்த ஏரியில் இருந்து குடிநீருக்காக சப்ளை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்த தற்போது சிறிய குளம்போல் இருப்பதால் வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் இன்றுடன் நிறுத்தப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வெறும் 39 அடி மட்டுமே இருப்பதால் சென்னைக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் இன்னொரு ஏரியான சோழவரம் ஏரியில் இந்த வருட கோடைகாலத்தை சமாளிக்கும் அளவிற்கு தண்ணீர் உள்ளதால் சென்னையின் குடிநீர் தேவை ஓரளவு சமாளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.