2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 25 தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடரும் என்று திருமாவளவன் ஏற்கனவே உறுதி செய்துள்ளார் என்று கூறிய அவர், ஆனால் அதே நேரத்தில் என்னை போன்றவர்களின் மனநிலை என்னவெனில் 2026-இல் 25 தொகுதிகளை திமுக கூட்டணியில் கேட்டு பெற வேண்டும். இது நமது கட்சிக்கான சரியான நேரம் என்று நினைக்கிறோம் என்று கூறினார்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற ஆதவ் அர்ஜுனா கருத்து தவறானது அல்ல என்றும், கட்சியின் நிலைப்பாடு தான். ஆனால் அதே நேரத்தில் இதையெல்லாம் புத்தக வெளியீட்டில் பேச வேண்டாம் என்று திருமாவளவன் சொன்னதையும் மீறி பேசியதால் தான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றும் ஆதவ் அர்ஜுனா குறித்த கேள்விக்கு தெரிவித்தார்.
பொதுவாக ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் அதை உயர்மட்ட குழு பரிசீலித்து மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் அதற்கான வாய்ப்பை ஆதவ் அர்ஜுனா உருவாக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
விஜய் இன்னும் அரசியல் களத்தில் இறங்கவில்லை. பனையூரில் மட்டுமே இப்போது களம் உள்ளது. அவர் இன்னும் பயணம் செய்ய வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. சனாதனம், பிரிவினைவாதம், மதவாதத்துக்கு எதிராக அவர் நிற்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து என்றும் இன்னொரு கேள்விக்கு வன்னியரசு பதிலளித்தார்.