தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக மூத்த தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுனராக பதவியேற்றதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவராக பதவி வகித்து வந்த எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். அவருக்கு தமிழக பாஜக தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள வானதி சீனிவாசன் “தொடர்ந்து பாஜக எந்த மக்களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குறைக்கூறி கொண்டிருந்தார்களோ, அந்த பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரையே பாஜக தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் எப்படிப்பட்ட நபரும், பெரிய பிண்ணனி இல்லாதவரும் உழைப்பின் மூலம் பாஜகவில் முக்கிய இடத்தை பெற முடியும் என காட்டியுள்ளோம்” என கூறியுள்ளார்.