ஜோதிராதித்ய சிந்தியாவை பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக்கி மத்திய மந்திரி பதவி கொடுக்க மோடி விரும்புவதாக தெரிகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் தனது உட்கட்சி விவகாரம் காரணமாக தற்போது ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ளது. காங்கிரஸின் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியாவும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் நேற்று காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று ஜோதிராதித்யா சிந்தியா, பாஜக தலைவர் நட்டா தலைமையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் பின்வருமாறு பேசினார்...
எனது வாழ்க்கையில் இரு நிகழ்வுகள் மிக முக்கியமானது. ஒன்று எனது தந்தையை நான் இழந்த தருணம். இரண்டாவது நேற்று புதிய பாதை ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது.
தற்போதுள்ள காங்கிரஸ், முன்பிருந்த காங்கிரஸ் கட்சி போன்றது அல்ல. இளம் தலைவர்கள் பலர் இங்கு புறக்கணிகப்படுகிறார்கள். பிரதமர் மோடியின் அர்பணிப்பு, கொள்கைகளைக் கண்டு வியக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஜோதிராதித்ய சிந்தியாவை பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக்கி மத்திய மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையெனில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜக மாநிலங்களவை எம்பி-யாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.