உடுமலை படுகொலை செய்யப்பட்ட சங்கர் வழக்கில், கவுசல்யாவின் பெற்றோர் உட்பட 9 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் மற்றும் கௌசல்யா ஆகியோர் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கூலிப்படையை வைத்து மார்ச் 13 ஆம் தேதியன்று சங்கரை, கௌசல்யாவின் பெற்றோர் ஆணவப் படுகொலை செய்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பலியான சங்கரின் மனைவியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 11 மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு திருப்பூர் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், இரண்டு கல்லூரி மாணவர்கள் தவிர மற்ற 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சுப்பரிண்டெண்டெண்ட் சரோஜ்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவர்கள் 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.