செயின் பறிப்பு துரத்திச் சென்ற ஏட்டுவை கத்தியால் குத்தியதில், ஏட்டு மரணமடந்தார். இது குறித்த விசாரணையின் போது கொலையாளியும் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பார்வதி (28). இவர் உத்தனப்பள்ளி அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய தெலுங்கு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பார்வதி நேற்று மாலை பள்ளி முடித்து வண்டியில் திரும்பியபோது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல் வழிமறித்தது.
பின்பு, பார்வதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை அந்த கும்பல் பறித்தது. பார்வதி, கூச்சலிட மர்ம நபர்கள் பார்வதியை வண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடியது. அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்த பார்வதியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து உத்தனப்பள்ளி காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஓசூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டுகள் முனுசாமி (45), தனபால் ஆகியோர் ஓசூர் சாலையில் சாதாரண உடையில் கொள்ளையர்களை தேடிச்சென்றனர்.
அப்போது 3 பேர் அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிளில் உத்தனப்பள்ளியில் இருந்து ஓசூர் சென்றனர். இதை பார்த்த காவல் துறையினர் அவர்களை பின் தொடர்ந்தனர்.
இதை பார்த்த அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ஓட்டம் பிடித்தனர். காவல் துறையினரும் தொடர்ந்து அவர்களை விரட்டி சென்றனர்.
ஒரு கட்டத்தில், சிறிது ஓடிய பின்னர் அந்த மர்ம நபர்கள் எஸ்.ஜ. நாகராஜ், ஏட்டுகள் தனபால், முனுசாமி ஆகிய 3 பேரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் நாகராஜ் மற்றும் முனுசாமிக்கு அடி வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
ஆனாலும் தொடர்ந்து போராடிய காவலர்கள் ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பியோடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த காவலர்கள் 3 பேரையும் மீட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஏட்டு முனுசாமி நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையில், நகை பறிப்பு தொடர்பாக சிக்கிய நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் பெங்களூர் கே.ஆர். புரத்தை சேர்ந்த புச்சு (20) என்பதும், இவர் மீது பல கொள்ளை உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
இதற்கிடையே புச்சு இன்று அதிகாலை மாரடைப்பில் இறந்து விட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால், அவர் மாரடைப்பில் இறந்தாரா? அல்லது காவல் துறையின் தவறான அணுகுமுறையால் இறந்தாரா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.