இன்று தீரன் சின்னமலை நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ள உதயநிதி அதிமுகவையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இன்று சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. தீரன் சின்னமலையை நினைவு கூறும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் தீரன் சின்னமலையை நினைவு கூறும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலையை அவரது நினைவு நாளில் போற்றுவோம். மக்கள் வரிப்பணத்தை கைப்பற்றி மக்களுக்கே கொடுத்த தீரன் சின்னமலை வழிவந்த தமிழகத்துக்கு, மக்கள் வரிப்பணத்தைப் பறித்து பழைய ஓனரின் பங்களா வாங்கும் அடிமைகள் வாய்த்தது துரதிர்ஷ்டம். விரட்டுவோம்!” என்று கூறியுள்ளார்.
சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் தனது பதிவுகளில் அதிமுக குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். எனினும் தீரன் சின்னமலைக்கு மரியாதை செய்ய பதிவிடும்போது தேவையின்றி அதிமுகவை எதற்காக மறைமுகமாக சாடுகிறார் என அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளதாம்.