தமிழக சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளுக்கு கூடிய விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அதன் கூடவே வேலூர் தொகுதியில் நடைபெறாமல் இருக்கும் மக்களவை தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் யாருக்கு எந்த தொகுதி என திமுக – காங்கிரஸ் இடையே மோதல் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவின் முக்கிய பலங்களில் ஒன்று அதன் கூட்டணி கட்சிகள். கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. அதனால்தான் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவின் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகளால் தொடங்கப்பட்ட மக்கள் நல கூட்டணியோ அல்லது திமுகவோ கூட சரியான அங்கீகாரத்தை மக்களிடம் பெற முடியாமல் போனது. இதை புரிந்து கொண்ட ஸ்டாலின் இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு சரியான இடத்தை அளித்து மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அபார வெற்றி பெற்றனர்.
ஆனால் சமீபத்தில் திருச்சியில் ஒரு கூட்டத்தில் பேசிய உதயநிதி “நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும். வரும் காலங்களில் கூட்டணி கட்சிகள் துணை இல்லாமல் திமுக தனித்து போட்டியிட வேண்டும்” என பேசியுள்ளார். இது காங்கிரஸார் மற்றும் மற்ற கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி தற்போது எம்.பியாக பதவியேற்றிருக்கும் வசந்தகுமாரின் வெற்றி தொகுதியாகும். காங்கிரஸுக்கு அதிக செல்வாக்குள்ள தமிழக தொகுதிகளில் நாங்குநேரியும் ஒன்று.
சென்றமுறை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தீவிர முனைப்புடன் ஈடுபட்டிருந்ததால் சட்டசபை இடைதேர்தல் குறித்து அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் திமுக கூட்டணியில் இருந்ததால் இடைத்தேர்தலை அவர்களுக்கு விட்டு கொடுத்துவிட்டு மக்களவை தேர்தலை திமுக துணையோடு எதிர்கொள்ளலாம் என்ற வியூகத்தில் காங்கிரஸ் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை வேறு.
வேலூர் மக்களவை தொகுதியில் துரைமுருகன் மகன் நிற்பதால், இடைத்தேர்தலில் நாம் நிற்கலாம் என காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் உதயநிதி கூட்டணி கட்சிகளை புறக்கணித்து பேசியிருப்பது, இரண்டு கட்சிகளுக்குள் மேலும் நெருக்கடியை கொண்டு வந்திருக்கிறது.
அதே நேரத்தில் நாங்குநேரியில் உதயநிதி போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸோ நாங்குநேரியின் வெற்றிபெற்ற எம்.எல்.ஏவாக இருந்தவர் வசந்தகுமார்தான். அதனால் அவரை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என பேசிவருவதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகளின் வலிமையை ஸ்டாலின் புரிந்து கொள்ள காலம் எடுத்து கொண்டது போல உதயநிதிக்கும் சிறிது காலம் ஆகும் என சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.