தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த அரசியல் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசாக உருவாகி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால்பதித்து, விநியோகஸ்தர் மற்றும் நடிகர் என பரிணமித்து தற்போது தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார்.
திமுகவில் இருக்கும் மூத்த தலைவர்களை விட அவரைக் கட்சி அதிகமாக முன்னிறுத்துகிறது. இதன் மூலம் ஸ்டாலினுக்குப் பிறகு திமுக தலைவர் அவர்தான் என்றும் முதலமைச்சர் வேட்பாளர் அவர்தான் என்றும் கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் தான் படித்த லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது அந்த கல்லூரியில் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் “லயோலா கல்லூரியில் எனக்கு முதலில் சீட் கொடுக்க மறுத்துவிட்டார்கள். என் தாத்தா முதலமைச்சராக இருந்தும், அப்பா அமைச்சராக இருந்தும் அவரை நேரில் வரசொல்லிவிட்டார்கள். கல்லூரி தேர்தலில் நிற்கமாட்டேன் என சத்தியம் வாங்கிக் கொண்டுதான் எனக்கு சீட் கொடுத்தார்கள்” எனப் பேசியுள்ளார்.