தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர் கூட்டணி கட்சியான திமுகவை கடந்த சில வாரங்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திமுக சீனியர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்த போது இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
திமுகவுக்கு எதிராக பேசும் காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது என்றும் தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு வெற்றி பெற்ற பிறகு நம்மை மதிப்பதே இல்லை என்றும் சீனியர் அமைச்சர்கள் தலைமையிடம் புகார் கூறியதாக தெரிகிறது.
இதை கண்டுகொள்ளாமல் விட்டால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் இப்படி பேச ஆரம்பித்து விடுவார்கள் என தலைமைக்கு சீனியர் அமைச்சர்கள் வலியுறுத்திய நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமையிடம் திமுக தரப்பிலிருந்து அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து டெல்லியில் உள்ள தலைவர்கள் தமிழக காங்கிரஸ் கட்சி இடம் விளக்கம் கேட்க, கட்சியை வளர்ப்பதற்காக அப்படி பேச வேண்டியதாகிவிட்டது என்று கூற, அதற்கு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தி கட்சியை வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று டெல்லி கோபமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன,.
மேலும் திமுகவை விமர்சனம் செய்த கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி கண்டிப்பு காரணமாக இனி திமுக குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேச மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.